உலக சினிமா - ANONYMOUS - இரா.குண அமுதன்.

ANONYMOUS - இழிவுபடுத்தலின் வலி!

வில்லியம் ஷேக்ஸ்பியர்
இந்தப் பெயர் அவரை வாசிக்கும் அல்லது நேசிக்கும் அனைவருக்குமான ஒரு ஏகாந்தக் கனவு.ஆனால் பொறாமை நிறைந்த சமகாலக் கலைஞர்களுக்கு அவர் ஒரு சர்ச்சைகளின் நாயகன்! செய்தித்தாள்களிலும்,இணைய தளங்களிலும் திடீரென யாராவது ஒருவரின் பெயர் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை எழுதியவர் இவர்தானென்று பரபரப்பாக விவாதிக்கப்படும்.
அதன் உச்சமாக சமீபத்தில் கூட வில்லியம் ஷேக்ஸ்பியர் ஒரு ஆண்மகன் அல்ல, யூத இனத்தைச் சேர்ந்த ஒரு பெண் என்று ஒரு சர்சசையைக் கிளப்பினார் பல்வேறு பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டங்கள் பெற்ற ஜான் ஹட்சன் என்ற ஆய்வாளர்.எது எப்படியோ...ஹட்சன் ஒரே இரவில் உலகம் முழுவதிற்கும் பிரபலமான மனிதராகிப் போனார் என்பது மட்டும் உண்மை!
இத்தனை குழம்பிக் கிடக்கும் இந்தக் குட்டையில் மீன் பிடிக்க இன்னொருவரும் தன்னைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்...அவர் ரோலண்ட் எமரிச்.  

இண்டிபெண்டன்ஸ் டே (Indipendence day), காட்ஸில்லா(Godzilla), தி பேட்ரியாட் (The patriot),  
தி டே ஆப்டர் டுமாரோ (The day after tomorrow) என்பன போன்ற மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகளைத் திரைப்படமாக்கிப் பெரும் வெற்றி பெற்றிருந்த ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹாலிவுட் திரைப்பட இயக்குனர்.  "அனானிமஸ்"(Anonymous) என்று பெயரிடப்பட்ட  அந்தத் திரைப்படம் மறைந்து கிடக்கும் கதையொன்றை வெளிச்சத்திற்கு கொண்டு வரப் போவதாக விளம்பரம் செய்யப்பட்டது. 

இயக்குனர் ரோலண்ட் எமரிச்சும்,     திரைக்கதையாசிரியர் ஜோன் ஓர்லோப்பும் பத்திரிக்கையாளர்களின் நேர்காணலில் "இத் திரைப்படம் சலித்து ஓய்ந்து கிடக்கும் உணர்வுகளின் வெளிப்பாடல்ல.மூடி மறைக்கப்பட்ட உண்மைகளின் துணிச்சலான பதிவு" என்று பெருமைப்பட்டுக் கொண்டார்கள்.
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் திரைப்படத்தை எதிர் நோக்கியிருந்த நமக்கு ஷேக்ஸ்பியரின் மீது தனிப்பட்ட  தாக்குதல்களை பக்குவமற்ற முறையில் வீசும் அதன் திரைக்கதையின் கீழ் நிலை பெரும் ஏமாற்றத்தையும், அதிர்ச்சியையும்  தந்தது என்றால் மிகையில்லை.ஆழமாகக் கையாண்டிருக்க வேண்டிய ஒரு படைப்பு வெற்றுக் கற்பனைகளால் நம் இரசனையிலிருந்து தூர விலகி நின்றது தான் மிச்சம்! 

ஷேக்ஸ்பியர் வாழ்ந்த காலக்கட்டத்தில் தேவாலயங்களில் இருந்த ஒரே ஒரு பதிவேட்டைத் தவிர வேறு ஆவணங்கள் ஏதும் நடைமுறை வழக்கத்திலில்லை.அந்தப் பதிவேட்டிலும் ஷேக்ஸ்பியரின்  திருமண நாள்,அவரது மகன் இறந்து போன நாள் மற்றும் அவரது நினைவு நாள் ஆகியவை மட்டுமே பதியப்பட்டுள்ளது.வேறெந்தக் குறிப்புகளும் கிடைக்காவிட்டாலும் அவரது படைப்புகள் அவர் மீதான ஒரு ஆழ்ந்த புரிதலனுபவத்தை நமக்குத் தருகின்றன.ஆனால் அவர் நாடகங்களை எழுதிய காலம் 1589 முதல் 1613ம் ஆண்டு வரை என கண்டறியப்பட்டுள்ளது.அவரது தோற்றமும் ஓவியர்களைக் கொண்டு பின்னாளில் கற்பனையாக வரையப்பட்டதே!

"அனானிமஸ்"(Anonymous) என்ற இத் திரைப்படம் முதல் காட்சியிலேயே கல்வி அறிவு குறைவாகப் பெற்றவரும், கையுறை உற்பத்தியாளரின் மகனாகப் பிறந்தவருமான ஷேக்ஸ்பியரால் எப்படி இத்தனை உன்னதமான படைப்புகளை உருவாக்கியிருக்க முடியுமென்ற கேள்வியை எழுப்புகிறது! அதைத் தொடர்ந்து அவர் வாழ்ந்த 1600ம் ஆண்டையொட்டிய லண்டன் நகரம் நம் கண் முன் விரிகிறது.

வாரிசில்லாத முதலாம் எலிசபெத் மகாராணியின் வயது முதிர்ந்த காலக்கட்டம் அது.இராணிக்குப் பின்னர் ஆட்சியைப் பிடிக்கப் போவது யாரென்ற கேள்வி அரசியல் சூழ்ச்சிகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது. ரோபர்ட் சிசெல் என்ற மகாராணியின் செயலாளர் ஸ்காட்லாந்து இளவரசன் ஆறாம் ஜேம்ஸை ஆங்கில அரியணையில் அமர்த்தித் தன்னுடைய ஆதிக்கத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ளத் துடிக்கிறார்.அதே சமயம் மகாராணியின் முக்கிய ஆலோசகரான எர்ல் ஆப் ஆக்ஸ்போர்டு ஸ்காட்லாந்து இளவரசன் ஜேம்ஸை பதவியில் அமர விட்டுவிடக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கிறார்.அவருக்கு நிலப் பிரபுத்துவப் பிரமுகர்கள் பலரும் ஆதரவளிக்கிறார்கள். இந்த இடத்தில் திரைக்கதை திடீரெனப் பின்வாங்கி ஆக்ஸ்போர்டின் விடலைப் பருவத்தினை விவரிக்கத் துவங்குகிறது.
எல்லாவிதத் திறமைகளையும் தன்னிடத்தில் கொண்டவராகவும், மொழியறிவிலும்,  கல்வியிலும்  சிறந்தவராகவும் சித்தரிக்கப்படுகிற ஆக்ஸ்போர்டு அந்தச் சிறு வயதிலேயே நாடகங்களைப் புனைவதாகக் காட்சிப்படுத்தப்படுகிறார்.அதே நேரத்தில் உலகக் கலாச்சாரத்தினுள் ஆழ்ந்த ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிற ஷேக்ஸ்பியரின் அத்தனை நாடகங்களையும் இயற்றியவர்  இதே ஆக்ஸ்போர்டு தான் என்ற திடுக்கிடும் குற்றச்சாட்டினையும் திரைப்படம் அழுத்தமாகப் பதிவு செய்து நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது!  
இதைவிடவும் நம்மை இன்றும் கவிதைகளால்  வசீகரித்துக் கொண்டிருக்கும் 
'எ மிட் சம்மர் நைட்ஸ் டிரீம்'(A Midsummer Night's Dream)நாடகத்தை தன்னுடைய எட்டாவது வயதிலேயே ஆக்ஸ்போர்டு எழுதிவிட்டார் என்ற இயக்குனரின் வாதம் வெளிப்படையாகவே தடுமாறுகிறது!! 

ஆக்ஸ்போர்டு தான் எழுதிய நாடகங்களில் ரோபர்ட் சிசெலை மறைமுகமாகவும்,சில சந்தர்ப்பங்களில் நேரடியாகவும் நையாண்டி செய்கிறார்.இந்த நாடகங்களை அரங்கேற்றுவதன் மூலமாக சிசெலையும்,ஜேம்ஸையும் மதிப்பிழக்கச் செய்யலாமென்பது அவரது திட்டம்.ஆனால் அந்த நாடகங்களைத் தன்னுடைய பெயரில் அவரால் அரங்கேற்ற முடியாத அரசியல் சூழ்நிலை  நிலவியதால்  பென் ஜோன்சன் என்ற மற்றொரு நாடகாசிரியரை அதற்கென அமர்த்துகிறார்.பென் ஜோன்சனும் நாடகத்தை அரங்கேற்றுகிறார்.பார்வையாளர்கள் வரிசையில் ஒருவராக அமர்ந்து நாடகத்தை இரசித்துக் கொண்டிருக்கிறார் ஆக்ஸ்போர்டு.

ஷேக்ஸ்பியர் அந்த நாடகக்குழுவின் ஒரு சாதாரண நடிகராக வந்து போவதாகத் திரைப்படம் காட்டுகிறது.பிரம்மாதமான வெற்றியைப் பெறுகிற அந்த நாடகம் நிறைவு பெறுகிற வேளையில் பார்வையாளர்கள் மத்தியில் ‘நாடக ஆசிரியர் யார்? அவரை அரங்கிற்கு வரச் சொல்...’ என்ற கோரிக்கை எழுகிறது.ஒப்பனை அறையில் இருக்கும் நடிகரான ஷேக்ஸ்பியரின் காதுகளில் அந்தக் கோரிக்கை விழுந்ததும் பென் ஜோன்சனை முந்திக் கொண்டு கையில் பேனா இறகுடன் வேகமாக ஓடி அரங்கிற்கு வருகிறார். அவரைக் கண்ட பார்வையாளர்கள் அவரையே ஆசிரியராகக் கருதி ஆரவாரம் செய்வதாகவும்,ஆக்ஸ்போர்டு கண்ணீருடன் வெளியேறுவதாகவும்  காட்சி முடிகிறது.

ஆனால் இந்தக் காட்சியின் மூலம் மொழி அழகியலும்,என்றென்றும் புத்துணர்வு கொள்ளச் செய்யும் கவிதை நயமும் பொருந்திய 37 நாடகங்களுக்கான உரிமையை ஷேக்ஸ்பியரிடமிருந்து பறித்து,அதை எப்படியாவது ஆக்ஸ்போர்டின் வசமாக்கி விடவேண்டும் என்ற இயக்குனரின் பதட்டம் நிறைந்த பேராவலை நம்மால் எளிதில் உணர முடிகிறது.
ஒரு வேளை  அரைகுறை அறிவாற்றலுடன் தற்பெருமை பேசிக்கொண்டும்,குடித்துவிட்டு வேசியருடன் கும்மாளமடித்துக்கொண்டும் படம் நெடுக வருகிற ஷேக்ஸ்பியரின் பாத்திர அமைப்பின் மூலம் தன் பலவீனங்களை சுய நியாயப்படுத்துதலுக்கு இயக்குனர் உட்படுத்திக் கொண்டாரோ...என்னவோ?!

பிரசித்தி பெற்ற ரோமியோ மற்றும் ஜூலியட் (Romieo and juliet) ஐஞ்சீரடியில் எழுதப்பட்ட துன்பியல் கவிதையெனவும், மதுக்கூடமொன்றில் பென் ஜோன்சனால் வலுச்சண்டைக்கு இழுக்கப்படும் ஷேக்ஸ்பியர் அது போன்றதொரு ஐஞ்சீரடிக் கவிதை இயற்ற இயலாதவராய்த் தவிப்பதாகவும் இயக்குனர் மற்றொரு காட்சியில் பதிவு செய்கிறார்.ஆனால் உண்மை அதுவல்லவென்பதை அதன் வாசகர்கள் அனைவரும் உணர்வார்கள்.அந்தப் படைப்பு செய்யுள் வடிவத்திலில்லாமல் உரை நடை வடிவிலேயே இருக்கிறது! 

மேலும் பென் ஜோன்சனின் அசாதாரணமான கவிதைத் தொடரொன்றை முன்னுரையாகக் கொண்டே பின்னாளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களின் தொகுப்பு  1623ம் ஆண்டு புத்தகவடிவில் வெளியானது. "ஆழ்ந்த அன்பினில் நிலைத்திருக்கும் என் ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்களின் நினைவலைகளிலிருந்து... " (To the memory of my beloved author Mr.William Shakespeare)-என்ற தலைப்பில் அமைந்த அந்த நூலில் பென் ஜோன்சன் பின்வருமாறு எழுதுகிறார்.

மேடைகளில் நிகழ்ந்த அற்புதம்
காலங்கள் கடந்தும்
என் ஆத்மாவில் நிறைந்திருக்கும்
ஷேக்ஸ்பியரின் கவிப் பிரவாகம்!  

காகிதங்கள் கண்டுபிடிக்கப்படாத அந்தக் காலத்தில்  வெண்ணிறத் துணியில் பதிப்பிக்கப்பட்ட இந்த நூலின் மூலப்பிரதி இன்றும் பாதுகாக்கப்பட்டுள்ளது. மூடி மறைத்தலின் மற்றொரு உட்கூறாக இத் திரைப்படம் இந்த நிகழ்வையும் எளிதாகத் தாண்டிச் செல்கிறது.

இறுதிக் காட்சியில் மரணப்படுக்கையிலிருந்தபடி ஆக்ஸ்போர்டு "லீயர் அரசன்"(King Lear)நாடகத்தை எழுதி அதை ஷேக்ஸ்பியரிடம் ஒப்படைக்கச் சொல்லிவிட்டு உயிரை விடுவதாகப் படம் முடிவடைகிறது.இதைவிட அபத்தமான காட்சி வேறென்ன இருக்க முடியும்?

ஆங்கிலேய மனநிலை என்னவென்பதை நாம் கிட்டத்தட்ட 200 ஆண்டுகளாக  நன்றாகவே அனுபவித்திருக்கிறோம்.எனவே  கீழ் குடியில்  சாதாரண தோல் வியாபாரியின் மகனாகப் பிறந்த ஷேக்ஸ்பியரை ஓரம் கட்டி மூலையில் வைத்து விட்டு, பிரபுத்துவ வம்சத்தில் வந்த ஆக்ஸ்போர்டு வசம் இந்த ஆங்கிலப் புனைவுகளின் பெருமைகளை ஒப்படைத்து விடுவதில் அவர்களுக்கு இருக்கும்  பேராவலின் அதிர்வுகளை நம்மால் எளிதில் உள்வாங்க முடிகிறது.

பிரம்மிப்பூட்டும் நாடகங்களையும்,கவிதைகளையும் தந்த ஒரு மறுமலர்ச்சிப் பிம்பமாகவே ஷேக்ஸ்பியர் இன்றுமிருக்கிறார். அவரை வெற்றுப்புத்தி கொண்ட   ஒரு   ஐரோப்பிய ஆண்மகன் என நிருபிக்க ஆசைப்பட்டு,   இத் திரைப்படத்தின்  இயக்குனர்  ரோலண்ட் எம்ரிச் தன்னை ஒரு மரமண்டையென்று   நிரூபித்திருக்கிறார் என்றே எண்ண வேண்டியிருக்கிறது!!!

- இரா.குண அமுதன்.







                                                                         

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

1 comments:

  1. இதென்ன கொடுமையா இருக்கு....விரிவான தகவலுக்கு நன்றி.

    ReplyDelete