உலக சினிமா - WHIPLASH - இரா.குண அமுதன்

WHIPLASH - directed by Damien Chazelle

இந்தத் திரைப்படம் இசையை தொழில் நுட்பம் சார்ந்து அணுகாமல் அதன் கலை உன்னதங்களோடு அணுகியிருப்பது மிகப் பெரிய ஆறுதல். மனதிற்கு அமைதி இல்லை என்றால் நம்மில் பலர் இசையை நாடிச்செல்கிறோம். ஆனால் இசைக் கலைஞனின் மன அமைதியின் ஊடாக அந்த இசை பிறக்கிறதா? என்றால் பெரும்பாலான நேரங்களில் இல்லை என்பதே உண்மை. மனக் கட்டமைப்பு அலைக்கழிக்கப்படும் மிக மோசமான தருணங்களில் உருவான இசையே காலங்களைத் தாண்டி வென்றிருக்கிறது. இதற்கு மொஸார்டில் துவங்கி மைக்கேல் ஜாக்சன் வரை பல கலைஞர்களின் வாழ்வு உதாரணமாக இருக்கிறது.
Damien Chazelle இயக்கியிருக்கும் whiplash என்ற இந்தத் திரைப்ப்டம் ஆண்ட்ரூ நீமேன் என்ற இசை பயிலும் மாணவனுக்கும் டெரன்ஸ் ப்ளெட்சர் என்ற இசைக் கன்டெக்டருக்கும் இடையில் நடக்கும் மனப் போராட்டம் தரும் வலி ஊடான இசை பற்றி விவரிக்கிறது.
இசைக் கலைஞனை காதுகள் மட்டுமே அறியும்...என்ற சொல்லாடலின் ஆழத்தை முதல் காட்சியிலேயே காண்கிறோம். அது நியூயார்க்கில் உள்ள பிரபல இசைப் பள்ளி. டெரன்ஸ் ப்ளெட்சர் காதுகளில் அந்த டிரம்ஸ் இசை வந்து விழுகிறது. அது வரும் வழியே அவர் தொடர்ந்து நடக்கிறார் ஆண்ட்ரூ நீமேன் தனியறையில் அமர்ந்து டிரம்ஸ் வாசித்துக் கொண்டிருக்கிறான்.திடீரென தனது அறைக்குள் நுழையும் ப்ளெட்சரைக் கண்டு ஆண்ட்ரூ திகைத்துப் போய் எழுந்து நிற்கிறான். அவன் பெரிதும் மதிக்கும் ஒரு கன்டெக்டர் அவன் எதிரில் நிற்பதை அவனால் நம்ப முடியவில்லை. அவர் வேறெந்த உணர்வுகளையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. நாளை வகுப்பறையில் தன்னை வந்து பார்க்கும்படி சொல்லிவிட்டுப் போகிறார்.
மறுநாள் டெரன்ஸ் ப்ளெட்சர் தனது ஸ்டுடியோ பேண்ட் என்ற இசைக் குழுவின் ட்ரம்மருக்கு உதவியாளனாக ஆண்ட்ரூவைச் சேர்த்துக் கொள்கிறார்.
டெரன்ஸ் ப்ளெட்சர் மிகக் கடுமையான மன உளைச்சலில் இருப்பதை பின் வரும் காட்சிகள் பதிவு செய்கின்றன. இசைக் கலைஞன் பெரியவனா அல்லது அவனை வழி நடத்தும் கன்டெக்டர் பெரியவனா? என்ற போட்டி மனநிலையில் அவர் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.அதனால் தன்னிடம் வரும் இசைக் கலைஞர்களை அவர் மிகவும் மோசமாக நடத்துகிறார்.இசைக் கலைஞனின் வித்தகத்தை அதன் துவக்க நிலையிலேயே அழித்து விடுவதை மிகவும் இரசித்துச் செய்கிறார். ப்ளெட்சரின் இந்த நடத்தையால் இசை பயிலும் மாணவர்களில் ஒருவன் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறான்
இதன் பின்னர் ப்ளெட்சர் என்ற கன்டெக்டருக்கும், ஆண்ட்ரூ என்ற இசைக் கலைஞனுக்குமான போர் துவங்குகிறது. ஆம்...இதைப் போர் என்றுதான் வர்ணிக்க வேண்டும்.ஏனென்றால் ப்ளெட்சர் தனக்கு தொடர்ந்து அளித்துவரும் மன உளைச்சலில் இருந்து விடுபட மீண்டும் மீண்டும் இசையிடமே தஞ்சமடைகிறான் ஆண்ட்ரூ. தனது இசை ஞானத்தால் அவன் தன்னைக் கடந்து விடக் கூடாது என்பதில் ப்ளெட்சர் குறியாக இருக்கிறார்.
இறுதிக் காட்சியில் பார்வையாளர்கள் எதிரே நடக்கும் இசை விழாவில் ஆண்ட்ரூவிற்கு மட்டும் இசைக் குழுவினர் இசைக்கும் கோர்வைக்குத் தொடர்பில்லாத வேறு ஒரு இசைக் குறிப்பு தரப்படுகிறது. இது ப்ளெட்சரின் சூழ்ச்சி என்பது ஆண்ட்ரூவிற்குத் தெரிந்தாலும் அவனால் ஏதும் செய்ய இயலவில்லை. மற்ற கலைஞர்கள் ஒரே விதமாக வாசிக்க ஆண்ட்ரூவின் டிரம்ஸ் வாசிப்பு ஒட்டாமல் தனித்துத் தெரிகிறது. இயலாமையினால் கண்ணீர் சிந்தியபடி அவன் மேடையை விட்டுக் கீழே இறங்குகிறான்.அதே நேரம் வாசிக்கத் தெரியாத டிரம்மரை மேடையேற்றி விட்டதாக பார்வையாளர்களிடம் ப்ளெட்சர் மன்னிப்புக் கேட்கிறார்.அந்த உரையைக் கேட்ட ஆண்ட்ரூ வெறி பிடித்தவனாக மீண்டும் மேடை ஏறுகிறான். ‘கேரவன்’ என்ற ஒரு இசைக் கோர்வையை தனியாளாக டிரம்ஸில் வாசிக்கத் துவங்குகிறான். அவனைத் தடுக்க முயல்கிறார் ப்ளெட்சர்.ஆனால் வெறி கொண்டவனைப் போல வாசித்துக் கொண்டிருக்கும் ஆண்ட்ரூவை அவரால் நிறுத்த முடியவில்லை.முதலில் அதிரும் மற்ற கலைஞர்கள் பின்னர் அவனுடன் சேர்ந்து இசைக்கிறார்கள்.
நிலை கொள்ளாமல் தவிக்கும் ப்ளெட்சருக்குள் இருக்கும் இசைக் கலைஞன் ஒரு நிலையில் அவரது ஈகோவையும் மீறி வெளிப்படுகிறான்.ஆம்...இசையின் உன்மத்த நிலையில் ப்ளெட்சரும் அந்தக் கோர்வையில் தன்னை இணைத்துக் கொள்கிறார் என்ற நிலையில் படம் சட்டென முடிந்து போகிறது.பார்வையாளர்களின் கரவொலியை இறுதிக் காட்சியில் இயக்குனர் பதிவு செய்யவில்லை.அதன் முன்பாகவே படத்தை முடித்துவிடுகிறார்.
வாழ்வை நிரப்ப கலை ஒன்றால் மட்டுமே முடியும் என்ற செய்தியை இத் திரைப்படம் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

-இரா.குண அமுதன்..
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment