உலக சினிமா – ஆதாமிண்டே மகன் அபூ – நேதாஜி

ஆதாமிண்டே மகன் அபூ – நேதாஜி


யாருக்காகவும் காத்திராமல் சீரான வேகத்தில் போய்க் கொண்டே இருக்கும் காலம் மேலோட்டமான ,கலையம்சங்கள் பற்றிய கவனமில்லாமல் உருவாக்கப்பட்ட திரைப்படங்களை மட்டுமே புறந்தள்ளிவிட்டுச் செல்கிறது.படைப்புக் கலையின் அடிப்படையில் ஆழ்ந்த நோக்குடன் உன்னதமான கலையம்சமும் ,கதை சொல்லும் திறனும் வாய்க்கப் பெற்ற திரைப்படங்களுக்கு வயதாவதே இல்லை.

சமீபத்தில் நண்பர் ஒருவரின் உதவியால் ஒரு மலையாளப் படத்தின் குறுந்தகடு கிடைத்தது.அதை ஓட விட்ட சில நிமிடங்களிலேயே 'இத் திரைப்படத்தைப் பார்க்க மிகுந்த பொறுமை வேண்டும் போலிருகிறதே ' என்ற அயர்ச்சி என்னைச் சூழ்ந்தது.ஆனால் ஆச்சரியமூட்டும் வகையில் என்னை அறியாமலேயே பத்து நிமிடங்களுக்குள் அத் திரைப்படத்தில் நான் மூழ்கி விட்டிருந்தேன்.அதற்குக் காரணம் அத் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மது அம்பர்ட் .கண்ணை உறுத்தாத அழகிய ஒளிப்படங்களின் ஊடாக கதை நகர்வதைப் போன்ற உணர்வைத் தந்திருந்தார். '' ஆதாமிண்டே மகன் அபூ'' என்ற அத் திரைப்படம் தந்த உள்ளார்ந்த பாதிப்புகளில் இருந்து என்னால் இன்னும் மீள முடியவில்லை என்பதே உண்மை.
எளிமையான கிராமம் ஒன்றில் வசித்து வரும் வயது முதிர்ந்த முஸ்லிம் தம்பதியினரின் ஹஜ் யாத்திரைக் கனவு நனவாகிறதா? இல்லையா ? என்பதே இத் திரைப்படத்தின் ஒருவரிக் கதை 
கேரளத்தின் இயற்கை எழில் சூழ்ந்த கிராமத்தில் வாழும் அபூ என்ற முதியவர் பக்கத்திலுள்ள நகரத்துக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பும் காட்சியுடன் படம் துவங்குகிறது.அவர் வாழ்வின் நோக்கமும், கனவுமாக இருப்பது ஹஜ் யாத்திரை மட்டுமே.அவருக்கும் அவரது மனைவிக்குமான பயணச் செலவிற்காக பல ஆண்டுகளாகச் சேமித்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு ஒரு டிராவல் ஏஜென்சி மூலமாக ஆயத்தப் பணிகளைச் செய்து வருகிறார்.ஆனால் எதிர்பாராத விதமாக பணம் பற்றாக்குறையாகி விடுகிறது.தன் மனைவியின் நகைகளை விற்கிறார்.பிழைப்பிற்கு ஆதாரமாக இருந்த கால்நடைகளையும் விற்கிறார்.இருப்பினும் பணம் போதவில்லை.மேலும் ஐம்பதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது.வீட்டின் வாசலில் நிற்கும் ஒரு பலா மரத்தையும் மர வியாபாரியிடம் விற்கிறார்.மர வியாபாரியோ பணத்தைக் கொடுத்துவிட்டு மரம் உள்ளீடற்ற மரமாகி விட்டதாகக் கூறுகிறார். தன்னால் அந்த மரத்தை விற்க இயலாது .நட்டமே ஏற்படும்.ஆனாலும் முன்னரே பேசி முடிக்கப்பட்ட வியாபாரத்தில் தான் நேர்மையாக நடந்து கொள்ள விரும்பியே ஒப்புக் கொண்ட தொகையினைத் தருவதாகக் கூறுகிறார். மன வேதனைப்படும் அவரிடம் பணத்தை அபூ திருப்பிக் கொடுத்து விட்டு 'நான் மரத்தைத் தான் விலை பேசினேன்.விறகினை அல்ல.' என கண்ணியமாக மறுத்து விடுகிறார்.இதனிடையே ஐம்பதாயிரம் ரூபாய்க்காக உங்கள் பயணம் தடைப்பட வேண்டாம். அதை நான் தருகிறேன் என அபூவின் நண்பர் ஒருவர் உதவ முன்வருகிறார்.அதை மறுத்துவிடும் அபூ 'ஹஜ் பயணம் உயிரோடிருக்கும் போது செல்லும் இறுதி யாத்திரை.அதை என் சுய சம்பாத்தியத்தில் தான் நான் நிறைவேற்ற வேண்டும் ' என்று கூறுகிறார்.வேறு எந்த வழியும் புலப்படாததால் டிராவல் ஏஜென்சி நிறுவனரிடம் சென்று தங்கள் பயணத்தை இரத்து செய்துவிடும்படி கேட்கிறார் அபூ.'பணம் பற்றிக் கவலைப்பட வேண்டாம்.உங்களை எனது தாய்,தந்தையரைப் போல நினைத்து என்னுடைய சொந்த செலவில் நானே அனுப்பி வைக்கிறேன்.' என்று கூறுகிறார் டிராவல்ஸ் நிறுவனர்.அபூவோ சிரித்தபடியே 'உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.ஆனால் உங்கள் தாய்,தந்தையாக நீங்கள் எங்களை ஏற்கும் பட்சத்தில் ஹஜ் பயணத்தின் மூலம் கிடைக்கும் புண்ணியம் முழுமையும் உங்களைப் பெற்ற தாய்,தந்தையருக்கே போய்ச் சேரும்.எங்களுக்கு அதனால் எந்தப் பயனும் இல்லை.எனவே மன்னித்துவிடுங்கள்.' என்று கூறி மறுத்து விடுகிறார்.
வீடு திரும்பும் அபூவும் அவரது மனைவியும் மன்முடைந்தவர்களாய் தூக்கமின்றி இரவைக் கழிக்கிறார்கள்.அதிகாலை மசூதியிலிருந்து பாங்கு ஒலிக்கிறது.அதன் உட்பொருள் நெற்றிப் பொட்டில் அடித்ததைப் போல அபூவிற்கு ஒரு உண்மையை உணர்த்திவிடுகிறது.எழுந்து தன் மனைவியிடம் வரும் அபூ ‘இந்த ஹஜ் யாத்திரை நமக்குத் தடைபடக் காரணம் பணம் மட்டுமல்ல.நாம் ஒரு மாபெரும் தவறு செய்துவிட்டோம்.நம்முடைய சுய தேவைக்காக பலா மரத்தை வெட்டி விற்று விட்டோம்.ஆனால் அந்த மரத்தையும் அதை தனது வீடாகப் பயன்படுத்தி வாழ்ந்து வந்த எண்ணற்ற பறவைகள் மற்றும் பூச்சிகள் முதலான எல்லா உயிர்களுக்குமான வாழ்வாதாரத்தையும் சீர்குலைத்து விட்டோம்.அதைப் பற்றிய குற்ற உணர்வற்றவர்களாகவும் இருந்துவிட்டோம். இதுவே உண்மையான காரணம். என்று கூறுகிறார்.அடுத்த நாள் காலை புதிய மரக்கன்று ஒன்றினை எடுத்துவந்து பலா மரம் வீழ்ந்த இடத்தில் நட்டுவைத்துத் தண்ணீர் ஊற்றிவிட்டு தொழுகைக்கு நடந்து செல்வதாகப் படம் முடிகிறது.
இத் திரைப்படத்தில் அறுபது வயது நிரம்பியவராக நடித்திருக்கும் சலீம்குமார் நாற்பத்தைந்து வயதேயானவர். நம்ப முடியாதபடி நடிப்பில் மெருகு ஏற்றப்பட்ட வைரமாய் ஜொலிக்கிறார்.மிகை நடிப்பை உச்சுக் கொட்டி இரசிக்கும் நம்மை அவரது இயல்பான நடிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது.இவருக்கு இணையாக நடிப்பில் வெளுத்து வாங்குகிறார் மனைவியாக வரும் பழைய இந்தி நடிகை ஜெரினா பேகம்.பாஸ்போர்டில் தனது புகைப்படத்தையும்,தனது கணவரின் புகைப்படத்தையும் தூங்காமல் விடிய விடிய இரசிக்கும் காட்சியில் மென்மையான உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.கணவரின் வேதனைகளுக்கு தீர்வேதும் காண இயலாதவராய் தவிக்கும் காட்சி சிறிது பிசகியிருந்தாலும் ஒப்பாரி வைத்து அழும் மிகைநடிப்பில் கொண்டுபோய் விட்டிருக்கும்.உணர்வுகளை அழுத்தமாகவும்,இயல்பாகவும் திரையில் பதிவு செய்திருக்கும்  இயக்குனர் சலீம் அகமதை உச்சி முகர்ந்து பாராட்டலாம்.டிராவல் ஏஜென்சியில் வேலை பார்த்து வந்த இவர் தனது அனுபவத்தின் வாயிற் கதவுகளைத் திறந்து தேவையானதை மட்டுமே திரையில் கொண்டு வந்திருக்கிறார்.அதோடு இது இவரின் முதல் படம் என்பதையும் நம்ப முடியவில்லை.நாம் என்ன உள் வாங்குகிறோமோ அதை தெளிவாக வெளிப்படுத்தத் தெரிந்தாலே வெற்றியின் கதவினை சுலபமாகத் திறந்துவிட முடியும். அதைத் திறந்து விட்டார்.

சினிமாவைப் பற்றி நாம் ஏன் பெரிதாக அலட்டிக்கொள்ள வேண்டும்? என்ற வாதம் நல்ல திரைப்படங்களைக் காணும் போதெல்லாம் அர்த்தமற்றதாகி விடுகிறது.தன்னுடைய வாகனத்தை நிறுத்த இட வசதி வேண்டி வீட்டின் முன்புறம் இருந்த மரம் ஒன்றை வெட்டிவிட முடிவு செய்திருந்த என்னுடைய நண்பர் ஒருவர் ‘ஆதாமிண்டே மகன் அபூ‘வைப் பார்த்து விட்டு அம்முடிவினைக் கை கழுவினார் என்பதே என்னைப் பொறுத்த வரை இச் சினிமாவின் உச்ச வெற்றி.


-நேதாஜி.
ஆசிரியர் ‘யாழ் இன்பம்‘





Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment