உலக சினிமா - டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் - இரா.குண அமுதன்.

நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதினைப் பெற்றுத்தந்த திரைப்படம் 'அம்பேத்கர்'. இத் திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியான போது, மசாலாத் திரைப்படங்களுடன் போட்டியிட வலுவின்றித் தோற்றுப் போனது. அத் திரைப்படம் குறித்த ஒரு மீள்பார்வையே இக் கட்டுரை.
'' இந்த நாடு எங்களுக்கு இழைத்தது மாபெரும் அநீதியாகும். யுகம் யுகமாக காலால் மிதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்டவனுக்கு, அடிப்படை உரிமைகள் வேண்டி நான் முன்னெடுக்கும் போராட்டங்களால் இந்த தேசத்திற்கு எந்த ஒரு தீங்கும் நேர்ந்து விடாது. இதை என்னுடைய தாயகம் என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்... நாய்கள், பூனைகளை விட நாங்கள் கேவலமாக நடத்தப் பட்டால், குடி தண்ணீரைப் பெறவும் உரிமை  இல்லை என்றால் சுயமாரியாதையுள்ள எந்த ஒரு தாழ்த்தப் பட்டவனும் இந்த தேசத்தை தன்னுடைய தாயகம் என்று ஒப்புக் கொள்ள மாட்டான். '' 
- 1931 ம் ஆண்டு மகாத்மா காந்தியை சந்தித்த போது அம்பேத்கர் முன் வைத்த கருத்துக்கள் இவை.
மழைக்காக கோவில் வாசலில் ஒதுங்குகிற தலித் இளைஞனை தடியால் அடித்து நொறுக்குகிறது ஆதிக்க சாதியினா¢ன் கூட்டம். " உனக்கு மனசுல என்ன பொ¢ய அம்பேத்கர்னு நினப்போ? "-என்று கேவலமாய் ஏசுகிறான் அவர்களில் ஒருவன்.கோவில் வாசலில் நந்தி சிலை அருகில் அந்த இளைஞனின் உடல் ரத்த வெள்ளத்தில் கிடக்கிறது. பின்னணியில் பள்ளிக் குழந்தைகள் சிலர் தேசியக் கொடியை கையில் ஏந்திய படி " சாரே ஜஹாஸே அச்சா " என்ற பாடலுடன் ஊர்வலமாய் போய்க் கொண்டிருக்கிறார்கள். 
நெற்றிப் பொட்டில் அடிப்பதைப் போல் துவங்குகிறது... படத்தின் முதல் காட்சி! 
பரோடா மன்னர் அளிக்கும் நிதி உதவியைக் கொண்டு நியூயார்க் நகரில் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர் சட்டம் பயின்று கொண்டிருக்கிறார். அவர் முன் ஒரு கேள்வி வைக்கப்படுகிறது. நீங்கள் ஏன் இந்திய சுதந்திரப் போரில் ஈடுபடக் கூடாது? சிறிதும் யோசிக்காமல் அவர் பதிலளிக்கிறார்... " நான் இங்கு வந்திருப்பது கல்வி பயில்வதற்காக. படிப்பு முடிந்ததும் நான் பரோடா அரண்மனையில் அதிகாரியாக பணிபுரிய வேண்டும் என்பது ஒப்பந்தம்.  எனவே முழுக் கவனத்தையும் என் கல்வியின் மீதே செலுத்த நான் விரும்புகிறேன்."  ஆனால் அம்பேத்கரின் விருப்பம் அரண்மனைப் பணியல்ல.   அவர் மகார் என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். சாதீய இழிவுகளுக்கான வரலாற்று அடிப்படைகளை கண்டறிந்து, அரசியல் விடுதலைக்கு முன்னால் ஒரு சமூக விடுதலையை அடைந்து விட வேண்டும் என்பது அவரது உண்மையான நோக்கம். அதை முன்னோக்கிய ஒரு சட்டத் தெளிவினைப் பெற்று விட வேண்டுமென்பதே அவரது அத்தியாவசியமான தேவையாய் இருந்தது.

மஹாராஷ்ரா மாநிலத்தின் கொங்கன் மாவட்டத்தில் டபோலி கிராமம். தன் தந்தையுடன் ஆனந்தமாக துள்ளிய படி பள்ளிக்கூடம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறான் அந்த சிறுவன். அன்று தான் அவனுக்கு பள்ளியில் முதல் நாள். ஆனால் பள்ளி ஆசிரியர் அவனது சாதியைக் காரணம் காட்டி மற்ற மாணவர்களுடன் அவனை இணைந்து உட்கார வைக்க இயலாது என கைவி¡¢த்து விடுகிறார். அதையும் மீறி அவன் படிக்க விரும்பினால் புத்தகப் பை கொண்டு வரக் கூடாது, அவன் சாதியைக் குறிக்கும் வண்ணம் சாக்குப் பை தான் கொண்டு வர வேண்டும் மேலும் வகுப்பறைக்குள் அவனுக்கு அனுமதி கிடையாது, வராந்தாவில் நின்று வேண்டுமானால் உள்ளே நடக்கும் பாடங்களைக் கவனித்துக் கொள்ளட்டும் என்று நிபந்தனைகள் விதித்தார். " நான் தீண்டத்தகாதவன். நான் சார்ந்திருக்கும் இந்து மதம் இப்படித்தான என்னை ஒதுக்கி வைத்திருக்கிறது. "- அன்று இரவு முழுதும் அந்த சிறுவன் அழுது கொண்டே இருந்தான். மறு நாள் பள்ளிக்கூட ஆசிரியருக்கு அதிர்ச்சி. சாக்குப் பையுடன் அந்த சிறுவன் வராந்தாவில் கல்வி பயில அவருக்கு முன்னால் வந்து காத்திருந்தான்.

ஒரு மாட்டு வண்டியில் தன் நண்பனுடன் உல்லாசமாக பேசிக் கொண்டே பயணம் செய்து கொண்டிருக்கிறான் அவன். அவனது உரையாடலை வைத்து அவன் தாழ்த்தப்பட்டவன் என்பதை உணர்ந்து கொண்ட வண்டிக்காரன், வண்டியை தலைகீழாக கவிழ்த்து அவர்கள் இருவரையும் துரத்தியடிக்கிறான். இமைகளை மெல்லத் திறந்து தன் பால்ய நினைவுகளில் இருந்து மீள்கிறார் அம்பேத்கர். சுயமாரியாதை எனும் நெருப்பு அம்பேத்கர் நெஞ்சில் பற்றி எ¡¢ந்தது இதைப் போன்ற சிறு வயதில் அனுபவித்த பல அவமானங்களால் தான்.இதற்கிடையில் பரோடா சமஸ்தானம் அம்பேத்கருக்கு அளித்து வந்த கல்விக்கான நிதி உதவியை திடீரென நிறுத்தி விடுகிறது.வேறு வழியில்லாமல் அவர் இந்தியா திரும்புகிறார். 

பரோடா சமஸ்தானத்திலேயே அவருக்கு கணக்கு பார்க்கும் வேலை கிடைக்கிறது. தனக்கு கீழே வேலை பார்க்கும் பியூனிடம் குடிக்க ஒரு டம்ளர் தண்ணீர் கேட்கிறார் அம்பேத்கர். " உனக்கெல்லாம் தண்ணீர் கொண்டு வந்து தர நான் ஒன்றும் மானம் இழந்தவனில்லை " என்று பதில் வருகிறது. அவராகவே எழுந்து தண்ணீர் குடிக்க செல்கிறார்.  உடனே ஒரு அதிகாரி எழுந்து " நீ இந்த தண்ணீரை அசுத்தமாக்குவதை என்னால் அனுமதிக்க முடியாது. " என்று கடுமையாக ஆட்சேபிக்கிறார். அவமானத்தால் கூனிக்குறுகி நிற்கும் அம்பேத்கர் அந்த வேலையையே துறந்து விடுகிறார்.  இப்போது ஒரு கல்லூரியில் பேராசிரியர் வேலை கிடைக்கிறது. முதல் நாள் வகுப்பறையில் நுழைந்ததுமே மாணவர்கள் " ஒரு தீண்டத்தகாதவாரிடம் எங்களால் பாடம் கற்க இயலாது " என்று கூச்சலிடுகிறார்கள். 
" விருப்பமில்லாவிட்டால் வெளியே போகலாம் " என்று அமைதியாகக் கூறுகிறார் அம்பேத்கர். மீண்டும் கல்லூரியிலும் அதே பிரச்சனை. ஆம்... இங்கும் அவருக்கு குடிதண்ணீர் மறுக்கப்படுகிறது. ஆத்திரத்தின் எல்லைக்கே போகும் அம்பேத்கர் அவர்களின் எதிர்ப்பை மீறி தண்ணீரைக் குடித்து விடுகிறார். " உங்களுக்குத் தான் என்னால் தீட்டுப்பட்டுப் போன இந்தத் தண்ணீரைப் புனிதமாக்கும் மந்திரம் தெரியுமே...அப்படி விருப்பமில்லை என்றால் நீங்கள் அனைவரும் நாளை முதல் வீட்டிலிருந்தே தண்ணீர் கொண்டு வந்து விடுங்கள் "  என்று கூறிக் கொண்டே அந்த மந்திரத்தையும் உரக்கச் சொல்கிறார். அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர். மன்னரிடம் புகார் போகிறது. அம்பேத்கர் தன் தரப்பு நியாயங்களை எடுத்துச் சொல்கிறார்.  " என்னால் இவ்வளவு தான் உனக்கு உதவ முடியும். உன்னை நான் ஆதரித்தால் எனக்குத் தொல்லைகள் அதிகமாகி விடும் "-என்று கூறுகிறார் மன்னர். மனம் வெறுத்து பூங்காவில் தனிமையில் அமர்ந்து அம்பேத்கர் அழுவது காட்சிப் படுத்தப் படுகிறது. அம்பேத்கராக நடித்திருக்கும் மம்மூட்டி இந்த இடத்தில் தன் துல்லியமான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார்.
கல்வி அறிவு பெறுவதினால் மட்டுமே தன் இனத்திற்கான சமூக விடுதலை கிடைத்து விடுமென்ற நம்பிக்கை அன்றோடு அவரிடமிருந்து விலகி விடுகிறது. போராடுவதன் மூலமாகத் தான் இனி விடுதலை பெற்றாக வேண்டும் என்பதை உணர்ந்து கொள்கிறார் அவர். 
  
இந்த சூழ்நிலையில் அவருக்கு மீண்டும் லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டத்திற்கான படிப்பைத் தொடர சமஸ்தானம் உதவி செய்கிறது. ஆனால் அங்கு பிரச்சனை வேறு வடிவில் வருகிறது. ஆம்...நிறப் பிரச்சனை ! கருப்பர் என்ற காரணத்தால் சக வெள்ளையின மாணவர் ஒருவருடன் மோதல் வருகிறது. அங்கும் அநீதிக்கு எதிராகப் பொங்கி எழுந்து அந்த வெள்ளை மாணவனை மன்னிப்புக் கேட்க வைக்கிறார் அம்பேத்கர். 
இறுதி ஆண்டில் அவர் பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் சாதீய அமைப்புகள் குறித்த ஒரு கட்டுரையைச் சமர்ப்பிக்கிறார். கட்டுரையை ஒப்புக் கொண்டாலும் அதை வெளிப்படுத்திய கடுமையான மொழி நடையில் பயந்து விடுகிறது பல்கலைக்கழகம். மென்மையான நடையில் அதே கட்டுரையைத் தரச் சொல்லி திருப்பி அனுப்பி விடுகிறது. " என்ன செய்யப் போகிறீர்கள்? " என்று கேட்கும் தன் வெள்ளையினத் தோழியிடம் ...   " திருத்துவேன் " 
-ஒற்றை வரிப் பதிலை இருபொருள் அர்த்தத்தில் கூறுகிறார் அம்பேத்கர்.

நாடு திரும்பியதும் அம்பேத்கர் தீண்டாமை எதிர்ப்புப் போரில் தீவிரமாக இறங்குகிறார். மஹாராஷ்ராவில் கொலாபா மாவட்டத்தில் இருக்கும் மஹத் என்னும் ஊரில் சௌதார் என்ற பெயருடைய குளத்தின் நீரை தாழ்த்தப்பட்டவர்கள் அருந்தத் தடை விதிக்கப்படுகிறது. அம்பேத்கர் போராட்டத்தில் ஈடுபட்டு, நகர சபையில் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் அந்தக் குளத்து நீரில் பங்குண்டு என தீர்மானம் நிறைவேற்ற வைக்கிறார். ஆனாலும் ஆதிக்க சாதியினரின் மிரட்டலால் அது நடைமுறைப்படுத்த இயலாமல் போகிறது. 1927 ம் ஆண்டு மார்ச் 21 ல் அம்பேத்கர் தலைமையில் சௌதார் குளத்தில் நீர் அருந்தும் போராட்டம் நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுடன் சென்று அம்பேத்கர் அந்தக் குளத்து நீரை அனைவரையும் பருகச் செய்கிறார். அதைத் தொடர்ந்து அங்கு பெரும் கலவரம் வெடிக்கிறது.  ஆதிக்க சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளுக்கு தீயிட்டுக் கொளுத்தி விடுகின்றனர். அதோடு நில்லாமல் குளத்து நீரை புனிதப்படுத்த அதைக் கலயங்களில் எடுத்து , மந்திரங்கள் முழங்க யாகமும் நடக்கிறது. இறுதியாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு குடி நீரில் உரிமையுண்டு என்பதையும், அவர்களை நீர் அருந்த விடாமல் தடுப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் நகர சபை அறிவிக்கிறது.

அடுத்ததாக காளாராம் கோவில் நுழைவுப் போராட்டம். " மதம் தன்னைப் பின்பற்றுகிற அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டும். உயர் சாதிக்காரன் மட்டும் என் அருகில் வந்து வணங்கலாம். தாழ்த்தப்பட்டவனை கோவிலின் வெளியே நிறுத்தி வணங்கிவிட்டுப் போகச் சொல்...என்று எந்தக் கடவுளும் சொல்லவில்லை. மீறி அதைத் தான் மதம் வற்புறுத்துமென்றால் அதைத் தகர்ப்போம் "- என்று முழங்கிய படி ஆலயப் பிரவேசம் செய்ய வருகிறார் அம்பேத்கர். உயர்சாதி இந்துக்கள் கோவிலைப் பூட்டிக் கொண்டு உள்ளேயே இருந்து கொள்கிறார்கள். கோவிலுக்கு வெளியே தர்ணா போராட்டம் நடக்கிறது.  இப்போதும் ஆலய அனுமதி இல்லை. அதற்குப் பதிலாக தேரோட்டத்தின் போது வடமிழுக்கும் பணியை அனைத்து சாதியினரும் பொதுவாகச் செய்வது என முடிவாகிறது.
வடமிழுக்க தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறுகையில் உயர்சாதியினர் அவர்களை ஏமாற்றும் நோக்கில் வேகமாக தேரை இழுத்துக் கொண்டு ஓட்டமாய் ஓடுகிறார்கள். தாழ்த்தப்பட்டவர்களோ அவர்களை விரட்டிப் பிடிக்க முயல்கிறார்கள். அம்பேத்கரே அந்த இடத்தில் மயிரிழையில் தான் உயிர் பிழைக்கிறார். அவ்வளவு பெரிய கலவரம் மூண்டு விடுகிறது. ஆதிக்க சாதியினரின் சூழ்ச்சியையும், தாழ்த்தப்பட்டவர்களின் அவல நிலையையும் அருமையாக இயக்குனர் பதிவு செய்கிறார்.

மஹாராஷ்ராவில் என்னதான் நடக்கிறது? ஏன் அங்கே இத்தனை பெரிய கலவரம்? - இந்தக் கேள்விகளை கேட்பவர் சாதாரண மனிதர் அல்ல... மகாத்மா காந்தி. பாரிஸ்டர் பட்ட்ம் பெற்ற அம்பேத்கர் எனும் பெயருடைய ஒருவர் சமூக விடுதலை வேண்டி ஒரு போராட்டத்தை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறார்." பாரிஸ்டர்  பட்ட்ம் பெற்ற ஒரு பிராமணர் ஏன் தாழ்த்தப்பட்டவர்களுக்காக இப்படிப்பட்ட போராட்டங்களில் ஈடுபட வேண்டும்?"- இந்தக் கேள்வியை கேட்டவரும் அதே மகாத்மா காந்தி தான். " மகாத்மாஜி... அவர் பிராமணர் அல்ல. மகார் இனத்தைச் சேர்ந்தவர். " மகாத்மா எல்லையில்லாத வியப்படைகிறார். உண்மையில் இந்தியா முழுமைக்குமே தாழ்த்தப்பட்ட இனத்திலிருந்து பாரிஸ்டர் பட்டம் பெற்ற ஒரே மனிதர் அம்பேத்கர் மட்டுமே ! " அவரை நான் சந்திக்க வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். " -என்றார் மகாத்மா. ஆனால் அந்தச் சந்திப்பு கசப்புணர்வு அமைந்ததாக முடியும் என்பதை அவர் அப்போது உணர்ந்திருக்கவில்லை.

மகாத்மாவைச் சந்திக்க வந்து வெகுநேரமாகக் காத்திருக்கிறார் அம்பேத்கர். காந்தியோ கண்டு கொள்வதாக இல்லை. அம்பேத்கருக்கு அந்த இடமே மனதிற்கு உகந்ததாக இல்லை. இறுதியாக காந்தி " என்ன விஷயமாக என்னைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்? " என்று கேட்க..." மிஸ்டர் காந்தி,நான் உங்களைப் பார்க்க வரவில்லை.நீங்கள் தான் என்னைப் பார்க்க விரும்புவதாக தகவல் வந்தது. அதனாலேயே நான் வந்தேன். "- என்றார் அம்பேத்கர்.
" நீங்கள் நடத்தும் போராட்டம் சாதீய அடிப்படையில் அமைந்திருக்கிறது.  இது இந்துக்களிடையே பிளவை உண்டாக்கி, நம் தாயகத்தின் விடுதலைப் போராட்டத்தை பின்னடையச் செய்துவிடும் என்பதை நீங்கள் உணரவில்லையா? " என்று மகாத்மா கேட்கிறார். இந்தக் கேள்விக்கு அம்பேத்கர் சொன்ன பதில் தான் இக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.  அதிருப்தியுடன் இறுதியில் வெளியேறும் அம்பேத்கர் 
" மகாத்மாக்கள் வருவார்கள்...போவார்கள்... ஆனால் அடிமைத் தனம் இன்னும் ஆண்டாண்டு காலத்திற்கும் அப்படியே தான் இருக்கும் "  என்று கூறிவிட்டுப் போகிறார்.


காங்கிரஸ் கட்சி மகாத்மாவின் தலைமையில் சைமன் கமிஷனை புறக்கணிக்கும் முடிவினை எடுக்கிறது. ஒட்டு மொத்த இந்தியாவும் "சைமன் கமிஷனே திரும்பிப் போ!" எனப் போராட்டக்களத்தில் இருக்கும் போது அம்பேத்கர் மட்டும் அதில் கலந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு இந்து மதம் மறுத்து வருகிற உரிமைகளை அரசியல் சட்ட திருத்தங்களின் மூலமாக ஆங்கில அரசாங்கம் பெற்றுத் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறார். காங்கிரஸ்காரர்கள் அம்பேத்கரை தேசத் துரோகி என்று குற்றம் சாட்டத் துவங்குகிறார்கள். அடுத்ததாக வருகிறது லண்டன் வட்ட மேசை மாநாடு.  இம் முறை காந்தி அதில் பங்கேற்பதாக அறிவிக்கிறார். அம்பேத்கரும் அதில் பங்கேற்று ... "மக்களுக்கு இரட்டை வாக்குரிமை வேண்டும். அதில் தேர்ந்தெடுக்கப்படுகிற இருவரில் ஒருவர் தாழ்த்தப்பட்டவராக இருத்தல் வேண்டும்.  தாழ்த்தப்பட்டவர்களுக்கு என்று ஒரு தனிப் பிரதி நிதி ஒவ்வொரு தொகுதியிலும் வேண்டும்." என்று கோரிக்கை வைக்கிறார். மகாத்மா இதை கடுமையாக எதிர்க்கிறார். " தீண்டத்தகாதவர்களை ஹரிஜனங்கள் என்று அழைப்பதன் மூலம் தன்னை அவர்களின் காவலனாக காட்டிக் கொள்ள மிஸ்டர் காந்தி முயல்கிறார். அவர்களுக்கு புதிய பெயர் சூட்டியதன் மூலம் அவர்களை தனிமைப்படுத்த சதி செய்கிறார் என நான் குற்றம் சாட்டுகிறேன்.ஹரிஜனங்களுக்கு கல்வி அவசியம் என்பதை காந்தி ஒப்புக்கொண்டாலும்,அந்தக் கல்வியை பயன்படுத்தும் வாய்ப்புகளை அவர் மறுக்கிறார்.சட்டம், பொறியியல், மருத்துவம் என்று எதை அவர்கள் படித்தாலும் குலத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும். இந்துச் சாதீய அமைப்பு ஒருபோதும் மாறிவிடக்கூடாது என்பதே மகாத்மாவின் கொள்கை.ஆதலால் காந்தியின் வழியில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான விடுதலையை அடைய முடியாது."-என்று நேருக்கு நேராக காந்தியுடன் மோதுகிறார் அம்பேத்கர்.அவரின் துணிச்சல் காந்தியை மட்டுமல்ல...வட்ட மேசை மா நாட்டில் பங்கேற்ற மற்றவர்களை மட்டுமல்ல... அகில உலகையும் கிடுகிடுக்க வைத்து விட்டது.
பூனாவில் அம்பேத்கர் முன்வைக்கும் கோரிக்கைகளை எதிர்த்து மகாத்மா காந்தி உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவிக்கிறார். மீண்டும் அம்பேத்கருக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. வேறுவழியின்றி பூனா சென்று  காந்தியிடம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இரட்டை வாக்குரிமை குறித்து ஆலோசனை நடத்துகிறார் அம்பேத்கர். இந்த முயற்சி இந்துக்களிடம் பிளவினை ஏற்படுத்திவிடும் என்று பழைய பல்லவியையே மீண்டும் பாடுகிறார் காந்தி. சாகும் வரை உண்ணாவிரதத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதிபடக் கூறி விடுகிறார். அவருடைய நாடித்துடிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அனைத்து தரப்பினரும் அம்பேத்கர் வீடு முன்பு திரண்டு வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். "என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள இத்தனை போராடும் உங்களில் ஒருவர் கூட ஏன் காந்தியிடம் சென்று அவருடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வற்புறுத்த மறுக்கிறீர்கள்?"- நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின் அம்பேத்கர் தன் பிடியைத் தளர்த்தி காந்தியின் நிபந்தனைகளுக்கு ஒத்துக் கொள்கிறார். " மிஸ்டர் காந்தி, வட்ட மேசை மாநாட்டில் நான் தாழ்த்தப்பட்டவர்களுக்காக வாதாடிப் பெற்ற உரிமைகளை மீண்டும் தோல்வியடையச் செய்து விட்டீர்கள். நான் ஒப்புக் கொள்கிறேன்... உண்ணாவிரதம் ஒரு பலமான ஆயுதம் தான். ஆனால் அதை அடிக்கடி கையில் எடுக்காதீர்கள். ஆயுதமும் மழுங்கி விடும். நீங்களும் இருக்க மாட்டீர்கள். ஒரு வேளை இந்த தேசத்திற்கு நீங்கள் தேவைப்படலாம்."

இந்த இடத்தில் ராஜேந்திர பிரசாத், ராஜாஜி மற்றும் வல்லபாய் படேல் ஆகியோர் அம்பேத்கரை சந்தித்து சமாதானம் சொல்வது போல் ஒரு காட்சி வருகிறது. "இனிமேல் காந்தியை துறவி என்றோ, மகாத்மா என்றோ அழைக்காதீர்கள். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. நேரத்திற்கேற்ற மாதிரி அவர் குணம் மாறும். ஆதரவு நிலையும் மாறும். ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சாதியினருக்கு காலம்பூராவும் அடிமையாக வாழ வேண்டும் என்ற ஆசை மட்டும் மாறாது."- என்று கூறுவார் அம்பேத்கர். அப்போது ராஜாஜியின் முகபாவனைகளை ஊன்றிக் கவனித்தால்... திரைப்படக் கலை எத்தனை நுணுக்கமானது என்பதை உங்களால் உணர முடியும். எத்தனை தலைவர்கள் அம்பேத்கரை எதிரியாக நினைத்திருக்கிறார்கள் என்பதை வெட்டவெளிச்சமாக்கும் காட்சி அது. இன்னொரு காட்சியில் காந்தி வெளி நாட்டுத் துணிகளை எரிக்கும் போராட்டம் நடத்தப் போகிறாராம் என்று நண்பர் ஒருவர்  கூறுகிறார். " எரிக்க வேண்டிய விஷயங்கள் அவர் மனதில் நிறைய இருக்கிறது"...என்று பதில் தருகிறார் அம்பேத்கர்.
இந்தியா சுதந்திரம் பெற்று விடுகிறது.  நாட்டின் சட்டங்களைத் தீர்மானிக்க ஒரு கமிட்டி அமைக்கப் பட வேண்டும் , அதன் தலைவராக ஒரு வெளி நாட்டுக்காரரை நியமித்து விடலாம் என்று பிரதமர் நேரு முடிவு செய்கிறார்.இதைக் கேள்விப்பட்ட காந்தி உடனடியாக நேருவை நேரில் சந்திக்கிறார்.
"நம் நாட்டில் நிலவும் அசாதாரணமான சூழ் நிலையை ஒரு வெளி நாட்டவரால் உள் வாங்கிக் கொள்ள முடியாது. மேலும் அம்பேத்கர் போன்ற உள் நாட்டு சட்ட மேதைகளால் மட்டுமே சரியான வழிமுறைகளுடன் கூடிய சட்டங்களை இயற்றி நடைமுறைப் படுத்த இயலும்."- என்று கூறி அம்பேத்கர் சட்ட மந்திரியாகவும், சட்டங்களை நிர்மாணிக்கும் கமிட்டியின் தலைவராகவும் பொறுப்பேற்க வழி செய்கிறார்.இதன் மூலம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான வாயில்களைத் திறந்து விடுகிறார் மகாத்மா காந்தி. இதையும் திரைப்படம் அழுத்தமாகப் பதிவு செய்கிறது.

1951ம் ஆண்டு.பாராளுமன்றத்தில் சட்ட மந்திரி அம்பேத்கர் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்.இந்து திருமணச் சட்டம் மற்றும் விதவைகளுக்கான சட்டம் ஆகியவற்றில் தேவையான மாற்றங்களை அரசு பரிந்துரை செய்கிறது...என்று கூறி விவரங்களை எடுத்துரைக்கிறார்.அவ்வளவு தான்.அனைவரும் தாம்தூம் என்று குதிக்கிறார்கள்.நாத்திகராக தன்னை அறிவித்துக் கொண்ட நேருவும் மௌனமாக இருக்கிறார்.
"இந்தியா ஏற்றத்தாழ்வுகளின் தாயகம்.பல தளங்கள் உள்ள கட்டிடம் போன்றது.அதற்கு நுழைவாயில்கள் கிடையாது.படிக்கட்டுகளும் இல்லை.அந்தந்த தளத்தில் பிறந்தவன் சாகும் வரை வெளியேற முடியாமல் அந்தத் தளத்திலேயே இருக்க வேண்டியது தான்."
-என்று கூறிவிட்டு பதவியை ராஜினாமா செய்கிறார் அம்பேத்கர்.
இயலாமையும்,ஏமாற்றமும் அவரை வதை செய்கின்றன.இனிமேலும் இந்து மதத்தில் தன்னால் நீடிக்க முடியாது என்பதை உணர்கிறார் அவர்.இறுதியாக ஐந்து லட்சம் பேருடன் அவர் புத்த மதத்தை தழுவும் காட்சியோடு படம் நிறைவடைகிறது.



இத் திரைப்படத்தில் அம்பேத்கராக நடித்தமைக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் மம்மூட்டி." டாக்டர் அம்பேத்கராக நடிக்க மம்மூட்டியை தேர்வு செய்ததற்கு நான் உண்மையிலேயே சந்தோஷப் படுகிறேன்.ஆயிரக்கணக்கான தலித் மக்களுடன் அவர் நடித்த போது அவர்கள் அவரை உண்மையான அம்பேத்கராகக் கருதி கண்ணீர் வடித்ததை நான் நோ¢ல் கண்டேன்."-என்று புகழ்கிறார் இயக்குனர் ஜாபர் படேல். 
ஒரு மக்கள் தலைவரைப் பற்றிய படம் என்ற வகையில் சிறந்த படமாக அமெரிக்காவிலும் விருது பெற்றது அம்பேத்கர் திரைப்படம். 
நீண்ட வரலாற்றுப் பாதையில் நம்மை அழைத்து வந்த இயக்குனர் ஜாபர் படேல், இசையமைப்பாளர் ஆனந்த் மோடக், ஒளிப்பதிவாளர் அசோக் மேத்தா மற்றும் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

சங்கராச்சாரியின் இடத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவனை நிறுத்தி, அவன் காலில் பிராமணர்கள் விழத் தயாராயிருந்தால் நான் இந்துவாகப் பிறந்ததில் பெருமை கொள்கிறேன்.
-டாக்டர். பாபா சாகேப் அம்பேத்கர் 


-இரா.குண அமுதன்.









Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment