உலக சினிமா - சம்சாரா - கவிஞர்.சக்திஜோதி


"யசோதரா"இந்தப்பெயர் நினைவிலிருக்கிறதா என சம்சாரா படத்தின் நாயகி பெமா தன் காதல் கணவன் தஷியிடம் கேட்கிற கேள்வி இன்னும் என் நினைவிலிருக்கிறது.கூடவே நான் என் 
வாழ்வில் சந்தித்த,  சந்தித்துக் கொண்டிருக்கிற பெண்கள் பலரையும்  நினைத்துக் கொண்டேன்.
                     பரமேஸ்வரி,தமிழ்செல்வி,முருகாயி,சுப்புலட்சுமி என என் நினைவில் பெயர் தெரிந்தும் தெரியாமலும்  வந்து செல்கின்ற பெண்கள் பலரின் வாழ்வை  நினைவூட்டும் சம்சாரா திரைப்படம் நான் சமீபத்தில் பார்த்த படம்.
                    இமயமலையில் பரந்த லடாக் நிலப்பரப்பில் விரிகிற திபெத்தியன் ஆன்மீகக் காதல் கதை.சம்சாரா ஒரு தேடல்,ஆண் ஒருவன் தன்னுடைய ஆன்மீக ஞானம் தேடும் போராட்டத்தில் உலகத்தைத் துறப்பதும்,பெண் ஒருத்தி தான் உணர்ந்த அன்பினைத் தக்க வைத்துக் கொள்ள  உலக வாழ்க்கையோடு இயைந்து  போராடுவதும் என்கிற கதை தான் இந்தப் படம் . விஷ்வாமித்திரர் மேனகையின் ஊழ்வினைக் கதையை நினைவூட்டி எதிர்பாராத திருப்பத்துடன் அமைந்த திரைப்படம் . 
                    ஐந்து வயதிலிருந்து புத்த துறவியாக்கப்பட்டு  மடாலயத்தில் வளர்க்கப் படுகிற கதையின் நாயகன் தஷி தன் இளம் வயதின் பாலுணர்வு தூண்டுதலின் மாயத் தோற்றங்களில் சலனமடைகிறான்.  . அவனுடைய ஆன்மீக குரு அவனை உலக இச்சைக்கு உட்பட்ட வாழ்வுக்கு அனுப்பிவிடுகிறார். 
                   ஓடுகிற நதியில்  அவன் தன் துறவற ஆடைகளைக் களைந்து துறவறத்தைத் துறக்கிறான் . தன் நினைவில் இருந்து தன்னை காதல் வயப்படச் செய்த  தன் வாழ்வில் ஒருமுறை மட்டுமே பார்த்திருந்த பெண் பெமாவைத்  திருமணம்  செய்கிறான் . காதல் , மகிழ்வு , துயரம் , பொருளாதாரத் தேடல் , குழந்தை என குடும்பம் சார்ந்த உலகின் நடைமுறை வாழ்க்கைக்குப் பழகி விடுகிறான் .விவசாயம் சார்ந்த வாழ்வில் தரகுக்காரர்களின் ஏமாற்றுத் தனம் கண்டு கோபப்படுகிறான் . அதனால் விரோதமாகும் தரகுக்காரன் தஷியின் பயிர்களுக்கு தீ வைத்து விடுகிறான் . தஷி மிகவும் மனம் வருந்தி தரகுக்காரனிடம் சண்டையிடுகிறான் . மேலும் இந்தியப்பெண் சுஜாதாவுடன்   தற்செயலாக நிகழும் பாலியல் உறவுக்குப் பின் தன் வாழ்வு பற்றி மறு பரிசீலினை செய்கிறான் . ஒரு இரவு மனைவி குழந்தைகளைப் பிரிந்து வெளியேறுகிறான் . ஓடும் நதியில் இல்லற வாழ்வின் ஆடைகளைக் களைந்து காவி உடை  அணிந்து  மீண்டும் துறவற வாழ்வுக்குள் செல்கிறான். அப்போது அவனைத் தேடி குதிரையைக் கையில் பிடித்தபடி வருகிற அவன் மனைவி பெமா   கேட்கும் கேள்வி தான் ஹேய் யசோதரா " இந்தப் பெயர் நினைவில் இருக்கிறதா ?
                    நடுஇரவில்  குழந்தையை மனைவியை விட்டு விலகி ஞானம் தேடி சென்ற சித்தார்த்தனை புத்தர் என்று இந்த உலகம் கொண்டாடுகிறது . அப்படி ஒரு ஞானம் வேண்டி குழந்தையைக் கணவனை விட்டு யசோதரை சென்றிருந்தால் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளுமா எனக் கேட்கிறாள் .இங்கே ஆணுக்கு  ஞானம் என்பது  குடும்பத்தைத் துறப்பது . ஆனால் பெண்ணுக்கு ஞானம் என்பது உலக வாழ்வோடு இணைந்த உறவுகளால்  ஆனது . யசோதரையை சித்தார்த்தன் பிரிந்து சென்ற  பிறகு   அவளது துயரம் எதையும் அவன் அறியவேயில்லை . இந்த சரித்திரமும் அறியவில்லை எனக் கூறி பெமா தஷியைப் பிரிந்து செல்கிறார். 
                    துறவறத்தைக் கலைக்கவும் இல்லறத்தைக் கலைக்கவும் ஓடும் நதியைப் பயன்படுத்தியிருப்பது நல்ல குறியீடு . இறுதியில் நாயகி கையில் பிடித்துவருகிற குதிரையும் குறியீடாக பயன்பட்டிருக்கிறது . 
                    நம் நிலத்தில் தான் எத்தனை எத்தனை யசோதராக்கள் . கணவன் இறந்து விட்டால் கூட இங்கே பெண்ணுக்குத் துயரம் குறைவு . குடும்பத்தை  பாரம் எனக் கருதி ஓடிவிடுகிற கணவன்களால் பெண்கள்  அடையும் துயரங்களைச்  சொல்ல வார்த்தைகள்  இல்லை . கணவன்  இருக்கிறானா செத்து  விட்டானா என்பதை அறிய இயலாமல் குடும்பத்தை வழிநடத்திச்  செல்கிற எத்தனையோ பெண்களின் வாழ்வைப் பற்றி எனக்குள்   பேரலை எழுப்பியபடியிருக்கும் படம் சம்சாரா. 
                  பாண் நலின் இயக்கத்தில்  2001 இல் வெளியாகி உலகத் திரைப்பட அரங்கில் பல விருதுகளைப் பெற்ற படம் .


- கவிஞர்.சக்திஜோதி .
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment