உலக சினிமா - THE HOUSE OF SAND - அவனி அரவிந்தன்

தவழும் மணற்குன்றுகள்- அவனி அரவிந்தன்


ஆதிக்காலம் தொட்டு பாலைவனம் என்பது மர்மம் சூழ்ந்த பகுதியாகவே பார்க்கப்படுகிறது. சில எகிப்திய, பாரசீகக்கதைளை வாசிக்கும் போது மனக்கண்ணில் மணல்மேடுகள் எல்லாம் சாத்தானின் மேனியாக உருப்பெற்றிருக்கும். பிணந்தின்னிக் கழுகுகளின் பார்வை உயரத்தில், பொங்கி வரும் கடலின் அலைகள் மணலாக உறைந்து நிற்பதைப் போல அந்த மணல்சரிவுகள் தோற்றமளிக்கும். பாலைவனமானது தன்னைக் கடக்க நினைக்கும் வெற்றுத் துணிச்சல்காரர்களையும், வழிதவறி வந்தவர்களையும், வாழ்க்கையை வெறுத்தவர்களையும் வேறுபாடின்றி தன் வறண்ட நாக்குகளைச் சுழற்றி விழுங்கிவிடும் வல்லமை உடையது. அது எண்ணிலடங்கா கதறல் ஒலிகளையும் கோர மரணங்களின் சாட்சிகளையும் புயல்காற்றின் உக்கிரத்தின் வழியாக வெளிப்படுத்துகிறது. அத்தகைய நிலத்தில் வசித்து வாழ்வதை நம்மால் கற்பனை கூட செய்து பார்க்க இயலாது. ஆனால்
பாலைவன மணலின்  நினைவுக்குறிப்புகளில் கற்பனைக்கும் அப்பாற்பட்ட கதைகள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.
கிபி 1910இல் வாஸ்கோ என்பவன் மிதமிஞ்சிய கடன்பட்டு குடும்பத்தை நகர்த்த வழி தெரியாமல் நகரத்துடனான உறவை வெறுக்கிறான். குழம்பிய மனநிலையில் இளவயது மனைவியையும் அவளின் தாயாரையும் அழைத்துக் கொண்டு பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் ஒரு அத்துவான பாலைநிலத்திற்கு பயணப்படுகிறான். கழுதைகளில் உடைமைகளை ஏற்றிக் கொண்டு கூலியாட்கள் சிலருடன் ஒரு மாதத்திற்கும் மேலாக பாலைவனத்தில் திரிகையில் தண்ணீர் இருக்கும் ஒரு இடத்தை கண்டு அங்கே கூடாரங்கள் அமைக்கிறான்.

              குடிசை அமைக்கும் பணியில் கூலிகள் ஈடுபட்டிருக்க வாஸ்கோவும் அவன் மனைவியான ஆரேயாவும் உயர்ந்த ஒரு மணல் மேட்டில் அமர்கிறார்கள். அந்த இடத்தில் பண்ணை அமைக்கப் போகும் எண்ணத்தை மனைவியிடம் பகிர்கிறான். ஆரேயா தான் கர்ப்பமாக இருப்பதாகச் சொல்கிறாள். அதைக் கூறும் போது அவள் முகத்தில் தாய்மை அடையப்போகும் பெருமிதமோ, சிறிதேனும் மகிழ்வோ எதுவும் புலப்படவில்லை. வாஸ்கோவோ பிறக்கப் போகும் குழந்தை ஆண்பிள்ளையாக இருந்து அவனுக்கு பண்ணையில் உதவியாக இருப்பான் என கனவு காண்கிறான். அவன் மனைவிக்கு நகரத்தை விட்டு விலகியதில் சிறிதும் விருப்பம் இல்லை. வெறும் மணலே கடலாகப் பரவியிருக்கும் இங்கு வாழ்வது உன்மத்தமான முடிவென்று அவனைத் திட்டுகிறாள்.  தன் குழந்தை இப்படி ஒரு மயானச் சூழலில் வளருவதை நினைக்கவே முடியாதென்று கத்திக்கூப்பாடு போடுகிறாள். 

              மனிதர்களற்ற வெளியாக காட்சியளித்த வறண்ட நிலத்தில் திடீரென நாலைந்து கறுப்பர்கள் முளைத்து வந்து கூடாரங்களைக் கலைத்துவிட்டு அவர்களை அங்கிருந்து காலி செய்யச் சொல்லி மிரட்டுகிறார்கள். வாஸ்கோ தான் கொண்டு வந்த பொருட்களைக் கொடுத்து அவர்களிடம் இருந்து தப்பிக்கிறான். இரவில் ஆரேயாவின் தாயார் மரியா, கூலியாட்களிடம் தன்னிடம் இருந்த பணத்தையெல்லாம் தந்து தன்னையும் தன் மகளையும் வாஸ்கோவிடம் இருந்து காப்பாற்றி நகரத்துக்கு கூட்டிச் செல்லுமாறு வேண்டுகிறாள். மறுநாள் காலை புலரும் போது கூலியாட்கள் யாரும் அங்கு இல்லை. அவர்கள் மரியாவிடம் இருந்து வாங்கிக்கொண்ட பணத்தையும் கிடைத்த உணவுப் பொருட்கள் அனைத்தையும் எடுத்துச் செல்கிறார்கள். 

              கூலியாட்கள் இல்லாமல் மரக்கட்டைகளையும் கற்களையும் வைத்து வாஸ்கோவே தனியாக வீடு கட்டுகிறான், அப்போது கட்டிடப்பகுதி சரிந்து அவன் மேல் விழுகிறது. ஆரேயாவும் மரியாவும் பதறியபடி வந்து பார்க்கிறார்கள். கட்டுமானக் குவியலுக்குள் வாஸ்கோ அசைவற்றுக் கிடக்கிறான். வாஸ்கோவின் இறந்த உடலில் இருந்து திருமண மோதிரத்தை கழற்றி விரைவாகத் தன் விரல்களில் மாட்டிக் கொள்கிறாள் ஆரேயா. வயதான வாஸ்கோவிடம் மனைவி என்ற வகையில் ஆரேயா இந்த மோதிரத்தைத் தவிர வேறெதையும் பெற்றிருக்கவில்லை. பெரிய வருத்தம் எதுவுமின்றி அவனை அடக்கம் செய்கிறார்கள். ஆரேயாவிற்கும் மரியாவிற்கும் அவன் மரணம் அந்தக் கொடிய பாலைவனத்திலிருந்து விடுபடுவதற்கான ஒரு மார்க்கமாகத் தெரிந்தது. பார்வை எல்லைகளைத் தாண்டி படர்ந்திருக்கும் வெள்ளை மணலின் நடுவே  பச்சைத் தீவைப் போன்று அமைந்திருந்த பகுதியில் பெரிய மரங்கள் சூழ வாழும் கறுப்பர்களைத் தேடிச் செல்கிறாள் ஆரேயாவின் தாய் மரியா. அங்கு மசூ என்பவனிடம் மீனும் உப்பும் வாங்குகிறாள். அந்த மக்களில் யாரும் அவ்விடத்தைவிட்டு வேறெங்கும் செல்வதில்லை. வெளி உலகத்தைப் பற்றிய சிறு அறிதலுமின்றி ஒரு குழுவாக வாழப் பழகியிருந்தார்கள். அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு எங்கிருந்தோ தப்பியோடிவந்த அடிமைகளின் வழித்தோன்றல்கள் என்று தெரியவருகிறது. அவ்விடத்திற்கு உப்பு விற்க வருபவனின் தடங்களை பின்பற்றி பக்கத்து நகரத்துக்கு செல்லப்போவதாக ஆரேயா முடிவெடுக்கிறாள். ஆனால் ஆரேயா கருவுற்றிருப்பதால் பயணத்தை தள்ளிப்போடுகிறாள் அவளின் தாய் மரியா. வயதான காலத்தில் மரியாவிற்கு அந்தப் பாலைவன வாசம் ஒருவகையில் பிடித்திருந்தது. 

              மரியாவுக்கு உணவளித்த மசூ என்ற கறுப்பன் மற்றொரு நாள் ஆரேயாவின் குடிசைக்கே மீனும் உப்பும் கொண்டு வருகிறான். பதிலுக்கு ஆரேயா மேசைத் துணியை அவனுடைய மனைவிக்கு கொடுக்கிறாள். மசூ தன் மனைவி பிரசவத்தில் இறந்து விட்டதாகச் சொல்கிறான். இருவரும் வீட்டின் வெளியில் நின்று ஒட்டியிருக்கும் ஒரு மணற்குன்றைப் பார்க்கிறார்கள். மணல் துகள் நிரம்பிய காற்று முகத்தில் அடிக்கிறது. பாலைவனத்தில் மணல் ஒரு இடத்தில் இருப்பதில்லை. அது நகர்ந்து கொண்டே இருக்கும் என்கிற மசூ, ஆரேயாவின் வீட்டைச் சுற்றி வேலிகட்டித் தருகிறான். மணல்சரிவைத் தடுக்க தென்னம்பிள்ளை ஒன்றை நட்டு வைக்கிறான். அவனுக்கு புதிதாகக் குடிவந்த இந்த வெள்ளையர்களின் நெருக்கம் மனதை ஆசுவாசப்படுத்துவதாக இருந்தது. அதற்குமுன் அறிந்திராத உணர்வுகளின் படிமம் மசூவின் உள்ளத்தில் அலையாகச் சிதறுகிறது. அவன் அவ்வப்போது ஆரேயாவுக்குத் தேவையான உதவிகளை வலியச் செய்துவருகிறான். 

              ஆரேயா அவளைப்போன்றே ஒரு பெண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள். அவளுக்கு தன் தாயின் பெயரை வைக்கிறாள். அந்தச் சிறுமி எதைச் செய்வதிலும் ஈடுபாடில்லாமல் எப்போதும் உம்மணாம்மூஞ்சியாக  காணப்படுகிறாள். அவளுடைய பாட்டிக்கு அது கவலையளிப்பதாக இருக்கிறது. அவள் வளர்ந்ததும் மீண்டும் அந்த பாலைவனச்சிறையில் இருந்து தப்புவதற்கான முயற்சியெடுக்கிறாள் ஆரேயா. பாதை காண்பிப்பதற்காக நம்பியிருந்த உப்பு வியாபாரியும் இறந்து விட்டதாக மசூ தெரிவிக்கிறான். மரித்த கடலின் பிரேதம் போன்ற பாலைவனத்தில் திக்கற்று உலவுகிறாள் ஆரேயா. அப்போது உலோகத்தாலான ஒரு பொருளை கண்டெடுத்து அதன் வழி செல்லும் கால் தடத்தை பின்பற்றி நடக்கிறாள். வழியில் சூரிய கிரகணம் நிகழ்கிறது. இரண்டு நாள் பயணத்தில் புதிய மனிதர்களைப் பார்க்கிறாள். 

              1919ஆம் ஆண்டு மே மாதம் இருப்பத்தொன்பதாம் தேதி நிகழ்கிற சூரிய கிரகணத்தை ஆய்வு செய்வதற்காக ஆராய்ச்சியாளர்கள் அங்கு கூடாரம் அமைத்து தங்கியிருந்தனர். விஞ்ஞானிகளுக்காக இசைக்கருவிகள் வாசிக்கப்படுகின்றன. ஆரேயா ஒளிந்து நின்று இசையை ரசிக்கிறாள். அத்தனை ஆண்டுகளாக ஏங்கிக்கிடந்த அவளின் இதயத்தில் இசை பிரவாகமாக நிரம்பி மேனியெங்கும் பரவுகிறது. வாத்தியக் கம்பிகளின் அதிர்வு அவள் மனத்தின் வேட்கையை எதிரொலிப்பதாக உணர்கிறாள். ஆரேயாவிற்கு கண்கள் ஊற்றெடுத்து கன்னங்கள் அருவியாகின்றன. ஆராய்ச்சியாளர்களுக்குத் துணையாக வந்திருந்த லூயிஸ் என்ற இளைஞனிடம் ஆரேயா பழகுகிறாள். நான்கு வருடம் யுத்தம் நடந்து அப்போது தான் முடிந்ததாகச் சொல்கிறான் லூயிஸ். பத்துவருடமாக இந்தச் சூனியம் நிறைந்த நிலத்திலிருந்து வெளியே செல்ல முடியாததால் யுத்தம் ஆரம்பித்தது கூடத் தெரியாது என்று கழிவிறக்கத்தோடு ஆரேயா உரைக்கிறாள். அவளும் லூயிஸ்சும் காதல் கொள்கிறார்கள். அவன் பிரேசிலின் வான்படையில் சேருவதைத் தன் லட்சியமாகச் சொல்கிறான். இரவின் குளிரில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது லூயிஸ் அவளுக்கு ஐன்ஸ்டீனின் ஆராய்ச்சிப் படிமங்களை விவரிக்கிறான். இரட்டையர்களில் ஒருவன் விண்வெளிப் பயணம் மேற்கொண்டால், பூமியில் இருப்பவனை விட இளமையாகத் திரும்புவான் என்று லூயிஸ் சொல்வது ஆரேயாவிற்கு புரியவில்லை. அவள் தன்னையும் தன் குடும்பத்தையும் அங்கிருந்து மீட்டுச் செல்லுமாறு கேட்கிறாள். அதற்கு லூயிஸ் மேலதிகாரிகளிடம் அனுமதி வாங்குகிறான். நம்பிக்கையின் வேர்கள் உள்ளத்தில் துளிர்விட ஆரேயா தன் தாயையும் மகளையும் அழைத்துவருவதற்காக குதிங்கால் மணலில் புதைய வேகமாக தன் இருப்பிடத்தை நோக்கி நடக்கிறாள்.
எதிர்பார்ப்புகள் பெருகத் திரும்பிய ஆரேயாவின் கண்களுக்குத் தெரிவது மணல் சரிந்த பாதி வீடு மட்டுமே. ஆரேயாவின் தாய் மரியா அதில் புதைந்து போகிறாள். தன் குழந்தை மரியாவுடன் ஆரேயா ஆராய்ச்சி நடந்த இடத்திற்கு போவதற்குள் அங்கிருந்தவர்கள் புறப்பட்டிருந்தார்கள். முகத்திலறையும் மணற்காற்றே மீதமிருந்தது. விஞ்ஞானிகள் மீண்டும் அங்கு வருவதாக லூயிஸ் சொன்னதை நினைத்து ஆரேயா அடிக்கடி அந்த இடத்திற்கு வந்து பார்த்து விட்டுப் போவாள். ஆனால் அவர்கள் வரவேயில்லை. கோடிக்கணக்கான துகள்கள் ஒன்றாகக் குவிந்திருந்தாலும் பாலைவனம் எப்போதும் தனிமையின் அடையாளமாகவே இருப்பதாக உணர்கிறாள். வேலையெதுவும் இல்லாத பொழுதில் ஆரேயா பெட்டியில் இருந்து பழைய புகைப்படங்களைப் எடுத்துப் பார்க்கிறாள். தான் நகரத்திலிந்து விலகியிருப்பதில் மிகவும் பிரிந்திருப்பது இசையை மட்டுமே என்று ஒரு புகைப்படத்தைப் பார்த்து வருந்துகிறாள். இசை வேண்டுமென்றால் பாட்டு பாட வேண்டியது தானே என்கிற மரியாவிடம், தான் நகரத்தில் இருக்கும் போது பியானோ வாசித்ததையும் அதுவே உண்மையான இசையென்றும் ஏக்கத்தோடு ஆரேயா சொல்கிறாள். 

               ஒரு நாள் மசூ, ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் வருவதை தன் மகனுடன் ஓடி விளையாடும் போது பார்க்கிறான். விஞ்ஞானிகள் வந்ததை அவளுக்குச் சொல்லாமல் சுயநலமாக மறைக்கிறான். ஆரேயா இதை அறிந்து கொண்டு வேறு வழியில்லாமல் மசூவுடன் இணைகிறாள். கடற்கரையிலிருந்து திரும்பும் மரியா மசூவும் அவள் தாயும் உறவில் இருப்பதை பார்த்துவிடுகிறாள். மரியாவுக்கு பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் ஒரே குடும்பமாகிறார்கள். இதற்கிடையில் மரியா விட்டேத்தியாக வளர்கிறாள். கொக்கெயின் புகைத்தும், மதுவின் போதையில் கறுப்பின அடிமைகளுடன் வரம்புமீறி பழகியும் திரிகிறாள். மகளை நினைத்து ஆரேயா கவலை கொண்டு, அவளை எப்படியாவது இந்த ஏகாந்தத்திலிருந்து விரட்டிவிட வேண்டும் என நினைக்கிறாள். 

              அது 1942ஆம் வருடம். அந்த பாலைவனத்தின் மேல் அடிக்கடி ஆகாய விமானங்கள் வட்டமிட்டு திரிகின்றன. மரியாவும் மசூவும் கடற்கரையில் ஒரு சடலத்தைக் கண்டெடுக்கிறார்கள். மரியா அந்த சவத்தில் இருந்து மேற்சட்டையை உருவி குளிருக்குப் போர்த்திக்கொள்கிறாள். கடலில் விழுந்து நொறுங்கிய பிரேசிலின் போர் விமானத்தைத் தேடும் பணிக்காக கமாண்டர் லூயிஸ் என்பவரின் தலைமையில் ஒரு குழு அங்கு வருகிறது. சடலங்களைத் தேட மசூ அவர்களுக்கு உதவி செய்கிறான். இருபத்தைந்து வருடத்திற்கு முன் தன்னைக் காதலித்த லூயிஸ்தான் இப்போது கமாண்டராக வந்திருப்பதை ஆரேயா தெரிந்து கொண்டு அவனிடம் தன் மகளை எப்படியாவது நகரத்திற்கு அழைத்துப் போகுமாறு கெஞ்சுகிறாள். குறைந்தபட்சம் நகரத்தில் ஏதாவது ஒரு இடத்தில் இறக்கிவிட்டாலும் அவள் வாழ்க்கையை தேடிக்கொள்வாள் என்று இரைஞ்சுகிறாள். 

               முப்பது வருடங்கள் கழித்து மரியா தன் தாயைக் காண நகரத்திலிருந்து காரில் வருகிறாள். நாகரிக ஆடையணிந்து குளிர்கண்ணாடியுடன் அசல் நகரத்துக்காரியாக தோற்றமளிக்கிறாள். அதே பழைய சமையல் மேடைக்கருகில் ஆரேயா அமர்ந்திருக்கிறாள். இரவு கவிழ்கிற நேரம் குடிலுக்கு வெளியில் அமர்ந்து மரியாவும் ஆரேயாவும் உணர்வுபூர்வமாகப் பேசிக் கொள்கிறார்கள். அப்போது மரியா மனிதன் விண்வெளியில் பயணித்து நிலவில் கால் பதித்ததைச் சொல்கிறாள். விண்வெளிப் பயணம் செய்தவர் இளமையாகத் திரும்பினாரா என்று வெள்ளி உருகும் நிலவைப் பார்த்து கேட்கிறாள் ஆரேயா. அவளுக்கு அந்த நிலவு நினைவின் ஆழங்களில் ஊடுருவி உள்ளார்ந்த உணர்வுகளின் தரவுகளை மேலெடுத்து வந்தது. நிலவில் கால் வைத்தவர் வயது முதிர்ந்தே திரும்பியதாக மரியா சொல்கிறாள். அங்கே அப்படி என்னதான் இருந்ததென்ற ஆரேயாவின் ஆர்வமான கேள்விக்கு, 'ஒன்றுமேயில்லை. வெறும் மணலைத் தவிர வேறெதுவுமே இல்லை', என்று பதிலுரைக்கிறாள் மரியா. 
  2005ஆம் ஆண்டு போர்த்துகீசிய மொழியில் வெளியான 'The House of Sand' (Casa de Areia) என்ற இந்த பிரேசிலிய திரைப்படம் முழுக்க முழுக்கலென்காயிஸ் மரான்ஹென்சிஸ் (Lençóis Maranhenses) என்றழைக்கப்படும் பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் அமைந்த பாலைவனத்தில் படமாக்கப்பட்டது. ஆண்ட்ருச்சா வட்டிங்டன் என்ற பிரேசிலிய இயக்குனர் எடுத்த இந்தப் படம் மிகக்குறந்த வசனங்களுடன் கதாபாத்திரங்களின் உணர்வுகளை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. பல இடங்களில் வார்த்தைகள் ஏவ நினைக்கும் கேள்விக் கணைகளை கண்களே தொடுக்கின்றன. என்றாலும் மௌனமே பெரும்பாலும் பதிலாக இருக்கிறது. முதல் பாதியில் ஆரேயாவாக நடித்தவரே பிற்பாதியில் ஆரேயாவின் வளர்ந்த மகள் மரியாவாகவும், முன்பகுதியில் ஆரேயாவின் தாயாக நடித்தவரே பின்பகுதியில் வயது முதிர்ந்த ஆரேயாவாகவும் நடித்திருக்கிறார்கள். அந்த இரு பெண்களுக்குமிடையில் நிஜத்திலும் தாய் மகள் உறவென்பது கூடுதல் தகவல். பிரம்மாண்ட மணற்பரப்பில் புள்ளியாக நகரும் உருவங்கள் தனிமையின் அளவை அதிகப்படுத்திக் காட்டுகிறது. பாலவனத்தின் நண்டு போல மெதுவாகத் தவழும் கதை இயல்பான கதைக்களங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தளத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சமீபத்தில் வெளியான எந்திரன் படத்தில் கையில் ஆப்பிளுடன் ரஜினியும், அளவான உடையமைப்பில் ஐஸ்வர்யா ராயும் பாடிய 'காதல் அணுக்கள்...' பாடல் இங்குதான் படமாக்கப்பட்டது. பளீர் வெள்ளை மணற்பரப்பில் பச்சையும் நீலமுமாக தண்ணீர் தேங்கியிருக்கும் அழகியல் கூறுகளில் மனதைப் பறிகொடுத்தவர்கள் அதன் மறுபக்கத்தை 'The House of Sand' (Casa de Areia) என்ற இந்த பிரேசிலிய படத்தில் காணலாம்.

-அவனி அரவிந்தன்
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

1 comments: