இ.எம்.எஸ்.கலைவாணன் அவர்களின் “ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” - கவிதை நூல் அறிமுகம்-நாணற்காடன்

There is no need to hear your voice, when I can talk about you better than you can speak about yourself. No need to hear your voice. Only tell me about your pain. I want to know your story. And then I will tell it back to you in a new way. Tell it back to you in such a way that it has become mine, my own. Re-writing you, I write myself a new. I am still author, authority. I am still the colonizer, the speaking subject, and you are now at the center of my talk. ........

உனது குரலைக் கேட்க வேண்டிய தேவை ஏதுமில்லை. உன்னைப் பற்றி நீ என்ன சொல்ல இருக்கிறாயோ அதைவிட அதிகமாகவே நான் உன்னைப் பற்றி சொல்ல முடியும். ஆகவே, உன் சொற்களைக் கேட்க வேண்டிய தேவை ஏதுமில்லை. உன் வலியை மட்டும் சொல். நான் உன் கதையை மட்டும் தான் கேட்க விரும்புகிறேன். மேலும், நீ சொல்லப் போகும் உன் கதையை வேறு திசைவழியில் நான் உனக்குத் திருப்பிச் சொல்லுவேன். என் குரலில், என் சொற்கள் வழியாக அதை உனக்குத் திருப்பிச் சொல்லுவேன். நான் என் எழுத்துக்களால் உன்னைப் பற்றி புதிதாக எழுதுவேன். நானே அதற்கான அதிகாரம் உடையவன். என் பேச்சின் மையப்புள்ளியாக, மையப் பொருளாக இருக்கப்போவது நீ தான். ஏனெனில், அதிகாரத்தின் உச்சத்தில் அமர்ந்திருப்பது நான் தான்......... ........

பெல் ஹூக்ஸ் அமெரிக்க பெண் எழுத்தாளர்.

மனு சாஸ்திரப்படி சாதிய அடுக்குகளால் பிரித்து வைக்கப்பட்டுள்ளது இந்திய சமூகம். சூத்திரர்கள் என மனு சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்ட மக்கள் யாவரும் ஆதிக்க சாதியினரால் அடிமை சாதிகளாக ஒதுக்கி, ஒடுக்கி வைக்கப்பட்டிருக்கிறார்கள். சாதியின் வேர் மனித மனங்களின் ஆழத்தில் கிளர்ந்து வளர்ந்துகொண்டே இருக்கிறது. பிடுங்கி எறிந்துவிடாதபடி வேலியிட்டும், அந்த வேர்கள் அழிந்துவிடாதபடி தண்ணீர் ஊற்றியும் ஆதிக்க சக்திகள் வளர்த்துக்கொண்டே இருக்கின்றன.

இத்தாலிய மார்க்ஸிய அறிஞர் ஆண்டனியோ கிராம்ஸ்க்கி அவர்கள் உலகளாவிய அளவில் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்களை subaltern என்ற சொல்லால் விளிக்கிறார்.

அதே போல இந்தியச் சமூகத்தில் சாதியால் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் தலித் என்ற சொல்லாலும், அவர்தம் இலக்கியத்தை தலித் இலக்கியம் என்றும் வரையறுக்கிறார்கள். தலித் என்ற மராத்திய சொல் 1960 வாக்கில் பயன்படுத்தப்படுகிறது. தமிழில் அயோத்தியா தாச பண்டிதர் தலித் இலக்கியத்திற்கு முன்னோடியாக இருக்கிறார்.

அவரைத் தொடர்ந்து பல்வேறு எழுத்தாளர்களும், கவிஞர்களும், அரசியலாளர்களும் தேவையான பங்களிப்பைச் செய்து தலித் இலக்கிய வளர்ச்சிக்கு பங்காற்றியுள்ளனர். ராஜ் கௌதமன், ரவிக்குமார், அரங்க.மல்லிகா போன்றோர் தலித் அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறார்கள்.

தலித் இலக்கியத்தில் பி.சிவகாமி, பாமா ஆகியோர் நாவல்கள் மூலமாகவும், அபிமானி, பூமணி, அழகிய பெரியவன் போன்றோர் சிறுகதைகள் மூலமாகவும் தலித் இலக்கிய வளர்ச்சியை முன்னெடுத்தனர். சுகிர்தராணி, ப்ரதிபா ஜெயச்சந்திரன், விழி.பா.இதயவேந்தன், யாழன் ஆதி போன்ற கவிஞர்கள் கவிதைகளின் வாயிலாக தலித் மக்களின் வாழ்வைப் பேசி வருகின்றனர்.

இவர்களின் வரிசையில் இதுவரை இலக்கியத்தில் கண்டிறாத நாவிதர்களின் வாழ்வை, ஒரு சவரக்காரனின் கத்தி முனையிலிருந்து கவிதையாக்கி தலித் இலக்கிய பாதையில் முக்கியமான பதிவைத் தந்திருக்கிறார் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இ.எம்.எஸ்.கலைவாணர். ”ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்” என்ற இந்தத் தொகுப்பு பிப்ரவரி 2015 ல் முதல் பதிப்பு கண்டது. மார்ச் 2015 ல் இரண்டாம் பதிப்பு கண்டது. தற்போது மூன்றாம் பதிப்பு அச்சில் உள்ளது. அது மட்டுமில்லாமல் இத்தொகுப்பு மலையாளம், இந்தி போன்ற மற்ற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

அனைந்திந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பொன்னீலன் அவர்கள் இந்தக் கவிதை நூலின் முன்னுரையில் ”இதுவரை திறந்து காட்டப்படாத மனித வாழ்வின் சன்னல்களை அகலத் திறந்து வைத்திருக்கிறது இந்த நூல்” என்கிறார். இந்த நூல் வெறும் சன்னல்களை மட்டுமில்லை, வாசற்கதவையேத் திறந்து வைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

நாவிதர் இன வாழ்வின் வலி நிறைந்த பக்கங்களும், ஏக்கங்கள் நிறைந்த கண்களும், இன்னமும் உடைக்கப் படாமலிருக்கும் அடிமைச் சங்கிலியின் கண்ணிகளும், இச் சமூகத்தின் மீது அள்ளித் தெளிக்கும் கேள்விகளும் நூல் முழுக்கக் கவிதைகளாக உலவுகின்றன.

தொட்டிலில் கிடக்கும் என்னை
சலூனில்
வேலை முடிந்து வந்த அப்பா
முத்தமிட்ட கன்னப்பரப்பில்
இரண்டு மூன்று
வெள்ளை முடிகள் ஒட்டியிருக்கின்றன

எந்த ஜாதிக்காரனின்
அழுக்கு மயிரோ?

என்ற தொடக்கக் கவிதை இச் சமூகத்தின் உடலில் முகமாக, தலையாக, மூளையாக சாதியின் சதைகளே ஆக்கிரமித்துள்ளன என்பதைச் சொல்லி தன் கத்தி முனையைச் சாணை பிடித்துக்கொள்கிறார் கலைவாணன்.

பண்டிதம், முண்டிதம், இங்கிதம், சங்கீதம் என நால்விதன் தெரிந்தவனே நாவிதன். அவனது வலது கையில் இன்று வெறுமனே சவரக் கத்தியும், இடது கையில் முகம் வழித்த நுரைக் கசடுமே மிஞ்சியிருக்கிறது. பண்டிதத்தையும், இங்கிதத்தையும், சங்கீதத்தையும் அவனிடமிருந்து இந்தச் சமூகம் உருவிக்கொண்டுவிட்டது. முண்டிதம் என்னும் சவரம் செய்யும் தொழிலை மட்டும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு அவனைத் தீண்டத் தகாதவனாய் ஆக்கியிருக்கிறது.

அப்பாவுக்க
மத்தத தாங்கிட்டு நடந்த
 கண்டன்விளை ஜோஸ்
வைத்தியன் ஆயிட்டான்
அவனுக்க மகன் டாக்டரு

சிலம்பாட்ட கம்புகளை
கயத்துல கட்டி
அவருக்க பின்னாலயே
தூக்கிட்டு அலைஞ்ச
மின்னல் தங்கசாமி
இப்ப திக்கணங்கோட்டு ஆசான்
இவனுக்க மக்கமாரு
இப்ப அமெரிக்காவுல

மல்லங் கருங்காளிக்க
மந்திர வாதத்துக்கு
கூட போன குமாரசாமிக்கு
ஆராய்ச்சில டாக்டர் பட்டம்

அப்பா டைரக்டு பண்ணுன
கான குயில்கள் நாடகத்துல
காமடி நடிச்ச செல்வராஜுக்க மகன்
 சினிமால டைரக்டரு

இப்படி எல்லாத்தையும்
உருவி கொடுத்திட்டு
அம்மணமா நிக்கிற
எங்கப்பன் பேரு வெறும் நாசுவன்
என் பேரு வெளங்காதவன்

இந்தக் கவிதை நால்விதனாக இருந்தவன் நாசுவனாக மாறிய கதையைச் சொல்கிறது. ஒரு கவிதை கவிதையாகும் கணத்தை தரிசிக்கும்போது தான் வாசிப்பின் பூரணத்துவத்தை அடைய முடிகிறது. ஒரு கவிதை நூலின் வழியாக நமது பூரணத்துவத்தின் நுனியை கண்டுகொள்ள வேண்டும். அப்படியான ஒரு கவிதையை ஒரு கவிதை நூலில் தேடி அடைய வேண்டும்.

 அப்பா
வெட்டியும் வழித்தும்
பெருக்கி கூட்டி
மூலையில் வைத்திருக்கும்
கறுப்பும் வெள்ளையுமான
மயிர்களின் வயலில்
அரிசியும் கிழங்கும் விளைந்தன
பிறகு அது
என் உடலில்
இரத்தமும் சதையுமானது

இந்தக் கவிதையில் வருகிற ”மயிர்களின் வயல்” என்ற சொல்லாடல்தான் கவிதையாகும் கணமாக ஆகி வாசிப்பவனின் மனவெளியில் பரந்து விரிகிறது. இனி மயிர்களை வெறும் மயிர்களாக மட்டும் பார்க்க இயலாது. அதில் அரிசியும், கிழங்கும் விளைகின்றன. அவை இரத்தமும் சதையுமாய் மாறுகின்றன. தொடக்க வரிகளும், வார்த்தைகளும் மிகச் சாதாரணமாக இயங்குகின்றன். ”மயிர்களின் வயல்” என்ற சொற்பயன்பாடுதான் கவிதையாகும் கணமாக விரிகிறது.

திருவனந்தபுரத்துல
திவாகரன் நாயர் தெருவுக்குள்ள
ரேவதி அக்காவுக்க வீடு

 மக கல்யாணத்துக்கு
கார்டு கொடுக்க போயிருந்தேன்

மருமகனுக்கு
பார்பர்ஷாப்ல வேலைன்னு சொன்னதும்
வாய பொத்தி
காப்பி தந்து
பஸ் ஏத்தி விட்டுட்டா
என்னை

அவ அங்க
ஒரிஜினல் நாயராம்.

சுய ஜாதி விமர்சனம் தான் எனினும், இந்தக் கவிதையின் மூலமாக தன் சாதியை மறைத்து வாழ வேண்டிய நெருக்கடிக்கு இந்தச் சமூகம் ரேவதி அக்காவை தள்ளிவிட்டிருக்கிறது என்பது தான் நிதர்சனம்.

கல்யாணத்துக்கு முத நாளு
பொண்ணுக்க அக்குளும்
அடி முடியும் வழிக்க போவா
எங்க லீலா சித்தி
அவ போறதும் வாரதும்
யாருக்கும் தெரியாது

இப்ப நாசுவத்திய கூட
காத்து கிடக்காளுக
கண்டவளுக்க பியூட்டிபார்லர்ல.

இந்தக் கவிதை பல்வேறு தளங்களில் இயங்குகிறது. நாவித இனத்தின் ஆண்கள் சலூன் கடைகளில் முடி வெட்டி, முகம் மழித்து, அக்குள் சிரைத்து மட்டுமல்லாது இழவு வீட்டுச் சாங்கியங்கள் செய்து பார்த்திருக்கிறோம். ஆனால், நாவித இனப் பெண்கள் மணப் பெண்ணின் அக்குள் முடி வழிக்கப் போவார்கள் என்ற செய்தியை இந்தக் கவிதை மூலமாகத்தான் பார்க்கிறோம். அந்தப் பெண்கள் போவதும், வருவதும் யாருக்கும் தெரிந்திருக்காது என்ற உண்மையையும் இந்தக் கவிதை சொல்கிறது. ஆனாலும், இன்றைய நாவித பெண்கள் பியூட்டி பார்லர் வாசலில் காத்திருக்கிறார்கள் என்ற விமர்சனத்தையும் முன் வைக்கிறது இந்தக் கவிதை. எல்லாச் சாதிப் பெண்களும் ப்யூட்டி பார்லர் நடத்துகிறார்கள் இன்று. கண்டவளுக்க ப்யூட்டி பார்லர்ல அக்குள் முடி வழிப்பதும் நடக்கத் தான் செய்யும். ஆனால், அந்தக் கண்டவளுக்க.. தங்களை நாசுவத்தி எனச் சொல்லிக்கொள்வார்களா?

நாவித இனத்தின் வாழ்வை அப்பட்டமாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி எடுத்துச் சொல்கிற ஏறக்குறைய அறுபது கவிதைகள் அடங்கிய இந்தத் தொகுப்பு தமிழ் தலித் இலக்கியத்திற்கு மிக முக்கியமான வரவு என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தொகுப்பு முழுக்க குமரி மாவட்டச் சொற்களும், பேச்சு வழக்கும், தொன்மங்களும் மிக நேர்த்தியாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆதிக்க சாதியினரால் நால்விதர்கள் எவ்வாறெல்லாம் ஒடுக்கப் படுகிறார்கள் என்பதைப் படித்துணர முடிகிறது.

வெறுமனே குமரி மாவட்ட நாவித இனத்தின் வாழ்வை மட்டும் பேசுவதாக இல்லாமல், ஒட்டு மொத்த தமிழகத்திலும் ஒடுக்கப்பட்ட இனமாக நாவிதர்கள் இருக்கிறார்கள் என்பதை உரக்கச் சொல்லும் பொதுமையான கவிதைகள் கொண்ட தொகுப்பிது.

 எங்க வகையறாவிலேயே
நல்லா படிச்சு
மார்க் எடுத்த பிள்ளைக்கு கொடுத்த
சவர சங்கத்து உதவி தொகையை
வேண்டாம்னுட்டான்
அவளுக்க அப்பன்
செட்டிக்குளம் சலூன் ரவி

ரூபாயில மயிரு மணக்கும்னு.

பல கவிதைகள் கதையாவதற்கான பாடுபொருள் கொண்டிருக்கின்றன. அவற்றைத் தேர்ந்து, சிறுகதையாக்கும் முயற்சியில் கலைவாணன் ஈடுபட வேண்டும்.

குந்திராண்டங்கள், துவர்த்து, தொடக்கு, ஜம்பர் துணி, சீலாந்தி மரம், தள்ளைக்கு, அங்ஙத்தை, உடுதுணி...இப்படியான வட்டார வழக்குச் சொற்கள் நூல் முழுக்க விரவிக்கிடக்கின்றன. என்ன பொருளில் இந்தச் சொற்கள் கையாளப்படுகின்றன என்ற கேள்வி வாசிக்கும்போது ஏற்படவே செய்கின்றன. அவற்றின் பொருள் அறிய ஆவலும் ஏற்படுகிறது. ஆனாலும், வாசிப்பின் போது சிறு தடங்கலாக இருக்கிறதென்பதை மறுக்க இயலவில்லை. இருப்பினும் கவிதையின் பாடுபொருளை கண்டடைவதில் எவ்விதச் சிரமமும் ஏற்படவில்லை.

ஓர் இனத்தின் ஒட்டு மொத்த வாழ்வையும் தரிசித்த பூரணம் இந்தத் தொகுப்பை வாசிக்கும்போது கிடைக்கிறது. தன் ஒட்டு மொத்த இனத்தின் பார்வையிலிருந்து தன் வாழ்வானுபவத்தை மையமாகக் கொண்டு இத்தொகுப்பைப் படைத்திருக்கிறார் கலைவாணன்.

நாகர்கோவிலு டவுணுல
செல்வக்குமாருக்க
ஜோதி சலூன் கடைய பாத்துட்டு வந்து
கருகருவென
நாலுகாலும் வளர்ந்த பலகைபோட்டு
கடகடவென மேல இழுத்து
ஆணி சொருகும்
தலை தாங்கி வச்ச
கடையில கிடந்த
பழைய மரச் செயரை மாத்தி
முன்னும் பின்னும் அசையும்
தலை சாய்ப்பு உள்ள
நீலக்கலர் மெத்தை போட்ட
வட்டமடிக்கும் கறக்கு செயரை
வாங்கணும்னு நினைச்சு
கடைசி வரை
வாங்கவே முடியல அப்பாவால்.

என்னும் இந்தக் கவிதை ஒட்டு மொத்தமாய் நாவித இனத்தின் பொருளாதார நிலையைச் சொல்லிப் போகிறது.

கலைவாணனின் அப்பா இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

அவர் நமக்கெல்லாம் பொன்னாடை போர்த்தி, முகம் மழித்து, மீசை திருத்தி, முடி வெட்டி, அக்குள் சிரைத்து, அடி முடி கத்தரித்து இரண்டு எதிரெதிர் கண்ணாடிக்கு நடுவில் நின்றுகொண்டேயிருக்கிறார்.

சவக்குழியருகே சடங்குகள் செய்துகொண்டு, ஆக்கத்தியால் தண்ணீர் கலயத்தில் மூன்று ஓட்டைகள் வெட்டிவிட்டுக்கொண்டிருக்கிறார்.

உடுதுணிகளுக்காக இழவு வீட்டு வாசலில் காத்துக்கிடக்கிறார்.

அவரைக் கண்டுகொள்வோம்.

இராத்திரி
அப்பா மிச்சம் வைத்த
கஞ்சியை குடிக்க
பசியோடு காத்திருப்பேன்
அதுல.....மிக்சர் பொடியும்
எவனுக்கோ வெட்டி தள்ளிய
அஞ்சாறு முடிகளும் மிதக்கும்

இனியாவது கலைவாணன்களின் அப்பாக்கள் மிச்சம் வைக்கும் கஞ்சியில் நம் யாரோவின் அஞ்சாறு முடிகள் மிதக்காமலிருக்கும்படி செய்வோம்.
Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

4 comments:

  1. ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள்- நூல் அறிமுகம். நாணற்காடன் = அருமையான பதிவு. இந்த புத்தகம் படிக்க வேண்டும். எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி - நாணல்- கலை இலக்கியப் பெருமன்றம்

    ReplyDelete
  2. மிக்க நன்றிங்க ஐயா....

    ReplyDelete
  3. சவரக்காரன் மட்டுமல்ல இன்னும் பல உண்மையிலேயே வறுமைக் கோட்டுக்கு கீழே பலரது நிலை எழுதப்படாமலே இருக்கிறது. அருகில் நின்று எடுத்துரைக்க நாமும் முயல்வோம்

    ReplyDelete
  4. நன்றி ஐயா.... மிகவும் நன்றாக இருந்தது

    ReplyDelete