வன்மைத் தருணங்களினூடே 
வாழ்க்கையெனும் இசை...

உலகில் அனைவராலும் அறியப்பட்ட மனிதர் யார்?
இதற்கான பதிலை நீங்கள் இணைய தளத்தில் தேடிப் பாருங்கள்.
உங்களுக்குக் கிடைக்கும் விடை... இயேசு நாதர்.
சரி ...அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் யாரென்பது உங்களால் யூகிக்க முடிகிறதா?
இந்தக் கேள்விக்கான பதில் வியப்பூட்டுவதாக இருக்கும் .
ஆம்...அவர் மைக்கேல் ஜாக்ஸன்.
உங்கள் அருகாமையிலும் மைக்கேல் ஜாக்ஸனை உங்களால் உணர முடியும்....சலூன் கடை சுவற்றில் ஓவியமாய் இருப்பார். வீதியில் எதிரே வரும் வாலிபனின் டி-ஷர்டில் சிரிப்பார்.
மைக்கேல் ஜாக்ஸன் இசைத் தொகுப்பில் எந்தப் பாடலையும் நான் கேட்டதேயில்லை என்று கூட நீங்கள் சொல்ல முடியாது.
ஏனென்றால் தமிழ் திரையிசையில் அவரின் பங்களிப்பு அப்படி.
ஒரு உதாரணம் தருகிறேன்...
 A.R.ரஹ்மான் இசையில்  ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த 'முத்து'( 1995 ) என்ற திரைப்படத்தில் வந்த 'குலுவாலிலே' என்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அந்தப் பாடல் மைக்கேல் ஜாக்ஸனின் ' THIRLLER ' (1982 ) என்ற இசைத் தொகுப்பில் உள்ள ' Bille jean ' என்ற பாடலின் அப்பட்டமான தழுவல் தான்.
இதே ' Bille jean ' பாடலை இசையமைப்பாளர்கள் சங்கர்-கணேஷ் ,கமலஹாசன் நடித்த ' மங்கம்மா சபதம் ' (1986) என்ற திரைப்படத்தில்  ' சொர்க்கத்தின் வாசல் எங்கே? ' என்ற பாடலாக உருமாற்றி தங்கள் இசை மேதமையை நிரூபித்தார்கள்.
மைக்கேல் ஜாக்ஸனின் 'DANGEROUS' இசைத் தொகுப்பில் இடம் பெற்றிருந்த 'Remember the time'என்ற பாடலின் திரை வடிவத்தைப் பார்க்க நேர்ந்தால் திகைத்துப் போவீர்கள்.இதே காட்சிகள் தானே ஷங்கர் இயக்கத்தில் வெளியான
 ' இந்தியன் ' திரைப்படத்தில் 'மாயா மச்சீந்திரா' என்ற பாடல் காட்சியில் இடம் பெற்றது...என்ற குழப்பத்திற்கு நீங்கள் ஆளாக நேரிடும்.
( இதே ரீதியில் நிறைய எழுதிக் கொண்டே போகலாம்... ஆனால் கட்டுரை திசை மாறிப் போய்விடும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்)
ஆகையால் நம்மால் தவிர்க்க முடியாத இடத்தில் அவர் இருக்கிறார் என்பதே உண்மை.
 உலகம் முழுவதிலும் அவருக்கு இருக்கும் இரசிகர்கள் கிட்டத்தட்ட நூறு கோடிப் பேர்.
இத்தனைக்கும் அவர் பாடியது மொத்தமே 62 பாடல்கள் மட்டுந்தான்.அவருடைய பாடல்களைப் பற்றி  விளக்க முயல்வது முடியாத செயல் என்றே எனக்குத் தோன்றுகிறது.
அது உணர்வுகளால் மட்டுமே நிரம்பிய ஒரு அனுபவம்.
அது1958 ம் வருடம். ஆகஸ்ட் 29...மைக்கேல் ஜாக்ஸன் பிறந்த நாள்.  
வியட் நாமில் அமெரிக்க விடுதலைப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த நேரம். 
வியட் நாமை அமெரிக்கா ஆக்ரமிக்க முயன்று தினமும் கொத்துக் கொத்தாய் அமெரிக்க வீரர்கள் பலியாகிக் கொண்டிருந்தனர்.நாடு திரும்பும் சவப் பெட்டிகளைப் பார்த்து அமெரிக்க மக்கள் போர் எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாய் ஈடுபட்டிருந்தனர்.  சீனாவில் கலாச்சாரப் புரட்சி.க்யூபாவில் பிடல் காஸ்ட் ரோ மற்றும் சே குவேராவின் அரசாங்கத்தை எதிர்த்த கொரில்லாப் போர். மொத்தத்தில் உலகமெங்கும் இளைஞர் பட்டாளம் புரட்சித்தீ யில் கனன்று கொண்டிருந்தது. எல்லாத் தேசங்களிலும் கடும் பொருளாதார நெருக்கடி.ஆனால் இளைஞர் எழுச்சி இதன் பின் வந்த சில வருடங்களில் நீர்த்துப் போனது. அவர்கள் விரும்பிய மாற்றம் உடனடியாக நிகழவில்லை. அந்தக் காலக்கட்டத்தில் தான் பாப் இசை என்றழைக்கப் படும் வெகு ஜன இசை மெதுவாகப் பரவி  இளைஞர்களை தன் வயப் படுத்திக் கொண்டிருந்தது. இங்கிலாந்தின் ' The Beatles ' இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளுக்கு  இளைஞர்கள் இலட்சக்கணக்கில் திரண்டு வந்து நடனமாடி ஒரு புதிய பாப் இசைக் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் அப்போது இசைக் கலைஞர்களாய் உருவாக முடியாத சூழல் நிலவிய தருணம் அது. மூன்றே வயதான மைக்கேல் ஜாக்ஸனோ
நிறவெறியுடனும், வறுமையுடனும்,அவரது கொடுமைக்கார தகப்பனாருடனும் போராடிக் கொண்டிருந்தார்.அவரது தந்தை ஜோ ஜாக்சன் ஒரு தோற்றுப் போன இசைக் கலைஞன் என்று தாராளமாகச் சொல்லலாம்.அதனாலேயே அவருக்கு தன் பிள்ளைகளை தான் தோற்றுப் போன இடத்தில் ஜெயிக்க வைத்து விட வேண்டும் என்ற வெறி இருந்தது.மற்ற குழந்தைகளைப் போல அவர் அவர்களை விளையாட அனுமதித்ததில்லை.இரவில் கூட தூங்கவிடாமல் கடினமான நடனம் மற்றும் இசைப் பயிற்சியில் ஈடுபடுத்தியிருந்தார்.'' நடன ஒத்திகையின் போது என் தந்தை சாட்டையுடன் முன்னால் அமர்ந்திருப்பார்.நடன அசைவு சிறிது பிசகினாலும் ஒற்றைக் காலால் என்னைத் தலைகீழாகத் தூக்கி முதுகிலும், பின்புறத்திலும் விளாசித்தள்ளி விடுவார்.சில நேரங்களில்  கொடூரமான முகமூடிகளை அணிந்து என்னைப் பயமுறுத்துவார்.அதனாலேயே நான் எத்தனையோ இரவுகளில் உறக்கம் வராமல் பயந்து நடுங்கியிருக்கிறேன்.ஆனால் இத்தகைய கடும் பயிற்சி எனக்கு கிடைக்காமல் இருந்திருந்தால் நான் இழந்த குழந்தைப் பருவம் இன்று செய்தியாக மாறியிருக்காது.ஏனென்றால் அன்று பெரும்பாலான கருப்பினக் குழந்தைகள் என்னைப் போலவே கடுமையான சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் ''-என்று பின்னாளில் ஓபராய் வின்ப்ரே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது மைக்கேல் ஜாக்ஸன் கூறினார்.
மைக்கேல் இசை உலகில் அடியெடுத்து வைத்த போது அவர் வயது 4. தலைவிரித்தாடிக் கொண்டிருந்த நிற வெறியை மிஞ்சும் அபார இசை ஞானம் அந்தப் பால்யப் பருவத்திலேயே அவருக்கு இருந்தது. கருப்பின பாடகராக இருந்த போதிலும் வெள்ளையினத்தவர் அனைவரும் அவரது இசை இழுத்த இழுப்பிற்கெல்லாம் ஓடினார்கள்.தன் 9 வது வயதில் நான்கு சகோதரர்களுடன் இணைந்து ' Jackson 5 ' இசைக் குழுவை ஆரம்பித்தார்.ஆரம்பத்தில் ' Jackson 5 ' குழுவினர் உள்ளூர் கிளப்களில் நடனமாடிக் கொண்டிருந்தனர். பிறகு பக்கத்து நகரங்களிலும் பிரபலமாக ஆரம்பித்தனர்.மைக்கேல் ஜாக்ஸனுக்கு 10 வயதான போது ' Jackson 5 ' குழுவிற்கு இசைத் தொகுப்பிற்கான  ஒப்பந்தம் தேடி வந்தது.1969 ம் ஆண்டு ஜாக்சன் சகோதரர்களின் இசைத் தொகுப்பான ' The Jackson 5 ' வெளியானது. முதல் முயற்சியிலேயே மைக்கேல் ஜாக்ஸன் தன் அபூர்வமான குரலின் மூலமாக கவனிக்கப் பட்டார்.அதன் விளைவாக  உலகின் பிரபலமான பாடகியாக கொண்டாடப் படும் டயானா ரோஸ் உடன் நியூயார்க் நகரில் உள்ள அப்பல்லோ இசை அரங்கத்தில் இணைந்து பாடும் வாய்ப்பு அவருக்குக் கிட்டியது.மைக்கேலின் இசை எல்லைகளில்லாத உயரங்களைத் தொட்டதன் துவக்கப் புள்ளி அது தான்.

அடுத்த ஆண்டிலேயே தனியாக இசைத் தொகுப்பு வெளியிடும் வாய்ப்பு Motown Records என்ற நிறுவனம் மூலமாக அவரைத் தேடி வந்தது.' Got tobe there ' என்ற அந்த இசைத் தட்டு பரபரப்பாக விற்பனையாகி சக்கைப் போடு போட்டது. உற்சாகமான Motown Records நிறுவனம் அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாகவே மைக்கேலை வைத்து ' Ben ' என்ற அடுத்த இசைத் தட்டை வெளியிட்டது.அதன் வெற்றியையும் தொடர்ந்து ' Music & me (1973), Forever Michael(1975)' முதலிய இசைத் தட்டுக்கள் வெளிவந்தன. இந்த நிலையில் Motown Records ஒப்பந்தம் முடிவுக்கு வந்திருந்தது.சரியான வாய்ப்புக்காக மைக்கேல் காத்திருந்தார். அவர் எதிர்பார்த்திருந்த தருணமும் வந்தது. Epic Records என்ற மிகப் பெரிய இசை நிறுவனம் அவருடன் இசைத் தொகுப்பிற்கான ஒப்பந்தம் செய்து கொண்டது.' Off the wall (1979)'என்ற அந்த இசைத் தட்டை Quincy Jones என்ற அமெரிக்க இசைமேதையின் தயாரிப்பில் மைக்கேல் வெளியிட்டார்.80களில் பெரும் அலையெனப் பரவிய டிஸ்கோ யுகத்தை அந்த இசைத் தட்டு தான் துவக்கி வைத்தது.

மைக்கேலின் வாழ்க்கையில் மிகமுக்கியமான வருடம் 1982. அந்த ஆண்டு தான் உலகை இசைப் போதையில் ஆழ்த்தி அவர் காலடியில் விழ வைத்த ' Thirller ' வெளியானது.  வெளியான ஒரு வருடத்திற்குள்ளாகவே 40 மில்லியன் இசைத் தட்டுகள் விற்பனையாகி உலக சாதனை படைத்து,  கின்னஸ் சாதனைப் புத்தகத்திலும் இடம் பிடித்தது.இன்று வரை அந்த சாதனை முறியடிக்கப் படவில்லை.Epic Records க்கு கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டியது. ' Thirller ' இசைத் தொகுப்பு 1984ம் வருடம் 8 கிராமி அவார்டுகளை வென்றது.ஆனால் மைக்கேல்  தன்னையறியாமலேயே பன்னாட்டு நிறுவனங்களின் வலையில் விழ ஆரம்பித்திருந்தார். தன் நிறம் புகழுக்குத் தடையாக இருப்பது போல உணரத் துவங்கினார்.அதற்கு ஒரு முக்கியமான காரணமும் இருந்தது.1981ஆம் ஆண்டு துவங்கப்பட்டு குறுகிய காலக்கட்டத்தில் மிகப் பிரபலமான M TV என்ற இசை சேனல் மைக்கேலின் பாடல்களை அவரது நிறத்தை காரணம் காட்டி ஒளிபரப்ப மறுத்தது. 
'நான் கறுப்பினத்தவன்...என்ற அடையாளத்தை விரும்பவில்லை'-
என்று மைக்கேல் தன்னிடம் கூறியதாக  Quincy Jones ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
1984ம் வருடம் 'Pepsi' குளிர் பானக் கம்பெனி விளம்பரப் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் மைக்கேல்.அன்று அவர் இட்ட அந்தக் கையொப்பம் அவர் மொத்த வாழ்வையும் சிதைக்கப் போகிறதென்பது அப்போது அவருக்குத் தொ¢யாது. ஆம்...அந்த விளம்பரப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அவர் ஒரு மோசமான தீ விபத்தில் சிக்கினார்.அவரது சுருள் கேசம் அதில் பெருமளவு கருகிப் போனது. முகத்திலும் லேசான தீக் காயம். மீண்டும் பிளாஸ்டிக் சர்ஜரியை நோக்கிப் போனார்.வலி நிவாரணி மாத்திரைகளை அப்போது தான் முதல் முறையாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தார். நாளடைவில் இரண்டிற்கும் அடிமையானார். 'என்றும் மாறாத இளமை' எனும் கனவு அவரை பாடாய் படுத்தியது .கிட்டத்தட்ட மனப் பிறழ்வு நோய் பீடித்தவர் போல் அறுவைச் சிகிச்சைகள் தொடர்ந்து செய்த வண்ணம் இருந்தார். மருத்துவமனையிலிருந்து அவர் வெளிவந்த போது பார்த்தவர் அனைவரும் வாயடைத்துப் போயினர். வெள்ளைக்காரர்களே வெட்கப்படும் அளவிற்கு தன் தோல் முழுவதையுமே பால் வெண்ணிறமாக்கியிருந்தார்.
'எனக்குப் புரியவேயில்லை.பார்க்கவும் வேடிக்கையாய் இருந்தது.அவர் முகம் மற்றும் உடல் முழுதும் இராசாயனப் பூச்சு.' என்றார் Quincy Jones. 
ஆனால் பன்னாட்டு நிறுவனங்கள் மைக்கேலின் மறைமுக ஏவல்காரர்களாகி விட்டிருந்தார்கள் என்பதே உண்மை.இல்லையென்றால் அதன் பின்னர் M TV அவருடைய பாடல்களை வரிந்து கட்டிக் கொண்டு ஒளி பரப்ப வேண்டிய அவசியம் தான் என்ன? 
இதைத் தவிர மைக்கேல் மேற்கொண்ட உலக இசைப் பயணங்களுக்கான மொத்த உரிமையை M TV தானே முன்வந்து வாங்கிக்கொண்டது.

இதன் பின்னர் மைக்கேல் காதல் பாடல்களில் இருந்தும்,சுய பச்சாதாபத்திலிருந்தும் வெளியே வந்து சமூக அக்கறையுள்ள பாடல்களை உருவாக்கத் துவங்கினார்.  1986ம் ஆண்டு 
ஹெய்தி , சோமாலியா முதலிய ஆப்பிரிக்க தேசங்களில் பாதிப்பை ஏற்படுத்திய பூகம்பம்  மற்றும் கடும் பஞ்சம் முதலியவற்றிற்காக 'We are the world ' என்ற இசைத்தொகுப்பை முண்ணனி பாப்பிசை நட்சத்திரங்களுடன் இணைந்து உருவாக்கினார். அந்த இசை தொகுப்பின் மூலம் திரட்டப்பட்ட 25000 கோடி ரூபாயை அந்தத் தேசங்களின் குழந்தைகளுக்கு அர்ப்பணித்தார்.உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட 39 தொண்டு நிறுவனங்களுக்கு நிரந்தரமாக நிதி உதவி கிடைக்கும் படி வாரிக் கொடுத்தவரும் மைக்கேல் மட்டுமே. இதற்காகவும் அவரது பெயர் கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
மீண்டும் Quincy Jones தயாரிப்பில் Epic Records மூலமாக 1987 ல் ' Bad ' இசைத்தட்டை வெளியிட்டார் மைக்கேல். இதன் மூலம் அவர் அடைந்த புகழும், பணமும் புவியீர்ப்பு விசைக்கு எதிராக அவரை வானில் மிதக்க வைத்தது என்றால் மிகையில்லை. தொடர்ந்து 'Dangerous(1991), History (1995), Invisible (2001)ஆகிய இசைத்தொகுப்புகள் வெளிவந்தன.இவற்றில் கடைசி ஒன்றைத் தவிர மற்றவை அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றன.

மைக்கேல் பெரும்பாலும்  2500 ஏக்கர் பரப்பளவு கொண்ட தன் Never land பண்ணை வீட்டில் குழந்தைகளுடன் பொழுதைக் கழித்தார்.உலகின் மிகச் சிறந்த பாப் ஸ்டார் தன் குழந்தையின் நண்பன் என்பதில் அந்தக் குழந்தைகளின் பெற்றோருக்கும் பெருமை தானே! ஆனால் இதே பெற்றோர்கள் தான் பின்னால் தன்னை சிறைச் சாலைக்கு அனுப்பி வைக்கப் போகிறவர்கள் என்பது அப்போது மைக்கேலுக்குத் தொ¢யாது.

 அது 2003 ம் வருட நவம்பர் மாதத்தில் ஒரு நாள். 
அந்தப் பண்ணை  வீட்டிற்குள் நுழைந்த போலீஸ் வாகனத்தில் இருந்த அனைவரும் உண்மையில் மெய் மறந்து போயிருந்தனர். Disney Land என்று அழைக்கப்படும் குழந்தைகளுக்கான பூங்காவையும் மிஞ்சும் வகையில் அபூர்வமான அமைப்பில் உருவாக்கப் பட்டிருந்தது. பிரபலங்களின் பாலுறவு வாழ்க்கைச் செய்திகளை விற்றுக் காசாக்கும் ஊடகங்கள் கேமராக்களுடன் காத்திருக்க...காவலர்கள் வீட்டின் உள்ளே சென்று அவரை அழைத்து வந்தனர்.
நேரலையாகவும்,தொடரலையாகவும் அன்று நாடு முழுவதற்குமான செய்தி அது தான்.
 
'' மைக்கேல் ஜாக்ஸன் கைது ! ''
 
அவ்வளவு தான்...குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் நிரூபணமாகும் வரை நிரபராதியாகவே கருதப் பட வேண்டும் என்ற நெறிமுறை செளகரியமாக மறக்கப் பட்டது. சேனல்களில் அலசல்களும், விவாதங்களும் அனல் பறந்தன.
Santa Barbara மாகாணத்தின் அரசு வழக்கறிஞர் Tom sneddon தொடுத்திருந்த வழக்கில் தான் மைக்கேல் கைது செய்யப் பட்டிருந்தார். Tom sneddon ஜார்ஜ் புஷ்ஷின் ஜன நாயகக் கட்சியை சேர்ந்தவர்.இவர் தான் 1993ம் ஆண்டிலேயே மைக்கேல் சிறுவர்கள் மீது பாலியல் வன்முறை செய்தார் என வழக்கு தொடுத்தவர்.அந்த வழக்கில் ஊடகங்களின் கவனத்தைத் தவிர்க்க  வெளியில் பணம் கொடுத்து சமரசம் செய்து கொண்டார் மைக்கேல். இது போக தன் பாடல்களில் Tom sneddon ஐ குறி வைத்து தாக்கும் வகையில் சில வரிகளையும்  எழுதியிருந்தார் .ஈராக்கில் அமெரிக்காஅப்போது அத்துமீறி நடத்தி வந்த இரத்தக்களரிகளை தலைப்புச் செய்திகளில் இருந்து மறைக்க மைக்கேலை ஜன நாயகக் கட்சி நன்கு பயன்படுத்திக் கொண்டது.

தன் மகன் மீது மைக்கேல் தகாத பாலுறவை வற்புறுத்தினார் ...என்று வழக்குத் தொடர்ந்திருந்த சிறுவனின் தாய் முன்பொருமுறை  செல்வந்தர் ஒருவர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்து பணம் பறித்தவள் என்று விசாரணையில் கண்டறியப்பட்டது.இதே போல குற்றம் சொல்லக்கூடிய நடத்தைகள் ஏதும் அவரிடம் இல்லை என்று அந்தச் சிறுவனும் விசாரணையில் தெரிவித்திருந்தான்.கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் பல்வேறு அலைக்கழிப்புகளுக்குப் பின்னர்  மைக்கேல் விடுதலையானார். இது தொடர்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ' என் ஆர்வமெல்லாம் இசையின் மீது மட்டும் தான்.நான் பாட வேண்டும். என்னை மன அமைதியோடு வேலை செய்ய விடுங்கள். ' என்று கெஞ்சினார்.


அவர் தீவிரமாக போருக்கும்,அதிகாரத்துக்கும் எதிரான பாடல்களை உருவாக்கினார்.ஆனால் அவருடைய தேசமோ உலக அளவில் போர்ச் சூழலை அதிகரித்துக் கொண்டிருந்தது.எல்லா வகைகளிலும் அரசியல் மற்றும் ஊடககங்களின் நெருக்கடிக்கு உள்ளானார்.
அமெரிக்காவில் வாழப் பிடிக்காமல் பஹ்ரைனில் குடியேறினார்.
ஆடம்பரத்தாலும், வழக்குகளாலும் பெரும் கடன் காரனாகி விட்டிருந்தார். 
ஆம்...25000 கோடி நிதி உதவி கொடுத்த மைக்கேல் ஜாக்ஸன் இப்போது 
2500 கோடி கடன் காரன். 
இசை நிறுவனங்கள் இப்போது மிரட்டும் தோரணையில் 
கடனை அடைக்கிறாயா? அல்லது உன் Never land பண்ணை வீட்டை ஏலத்திற்கு கொண்டு வரட்டுமா? என்றன. .அவரால் மறுக்கவே இயலாத சூழ் நிலை. 
கலைஞர்களின் சொத்து அவர்களின் திறமையும், ஆரோக்யமான உடலும் தான்.
இதில் பின்னது மைக்கேலுக்கு வாய்க்கவில்லை. 
மேடை வெளிச்சத்திற்காக அவர் உருவாக்கிய உடல் தோற்றம் இப்போது அவரைத் 
துரத்த ஆரம்பித்திருந்தது. 
ஐம்பது வயது. 
தோல் புற்று நோய். 
எலும்புகளிலும் பலவீனம்.
மருந்தின்றி நடமாட முடியாத நிலை... 
இத்தனைக்கும் நடுவே இங்கிலாந்து நாட்டில் ஐம்பது நிகழ்ச்சிகள் நடத்தித் தருவதாக sony நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். 
கடன் பிரச்சனை தீரும்... 
ஆனால் உடல் நிலை? 
எப்படியும் தயார் செய்தே ஆக வேண்டும். 
மருந்துகள், வலி நிவாரணிகள், மேலும் மருந்துகள்...

இறுதியாக...
2009 ஜூன் 25 அன்று ஒத்திகையின் நடுவில் தன்னைத் துன்புறுத்திய உடலை விட்டு வெளியேறினார் அவர்.
' என் இறுதிச் சடங்குகளை பூமியிலேயே மிகப் பெரிய கலை நிகழ்ச்சியாக நடத்த வேண்டும்' என்ற அவரது இறுதி விருப்பத்தை சக கலைஞர்களும், இலட்சக்கணக்கில் திரண்ட இரசிகர்களும் நிறைவேற்றி வைத்தனர். 
அவருடைய இறுதிக் கால ஒத்திகை நிகழ்வுகளை தொகுத்து 'This is it ' என்ற பெயரில் திரைப்படமாக வெளியிட்டு sony நிறுவனம்  காசு பார்த்தது.
(230 கோடி அமெரிக்க டாலர்)
அவர் இறந்து போகும் சாமானியர் அல்ல. இன்னும் வாழ்ந்து கொண்டேயிருக்கும் வருங்காலத்திற்கான கலைஞர் .

சோமாலியக் குழந்தைகளின் சிரிப்பில்...
கருப்பினப் பாடகர்களின் வெற்றியில்...
அடி நாதமாய் அவர் என்றும் இருப்பார் !

-இரா.குண அமுதன்.

Share on Google Plus
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment